விவசாயிகளுக்கு மண் பரிசோதனை பயிற்சி வழங்க நடவடிக்கை தேவை

கம்பம்: மண் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வழங்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி வேளாண் சார்ந்த மாவட்டமாகும். இங்கு நெல், வாழை,காய்கறிகள், பழங்கள் என அனைத்து விதமான பயிர்களும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடியாகிறது. அதிக மகசூல் என்ற இலக்கை நோக்கி விவசாயிகள், பூச்சிகொல்லி மருந்து பயன்பாட்டை அதிகரித்துள்ளனர். இதனால் மண் வளம் குறைந்துள்ளது. எனவே சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை செய்து, எந்த சத்து குறைவு,எது அதிகம் உள்ளது என்பதை தெரிந்து அதற்கேற்ப விவசாயிகள் செயல்பட வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் மண் பரிசோதனை செய்ய நிலத்தில் மண் எடுக்க வேளாண் அலுவலர்கள் வர வேண்டும். எல்லா நிலங்களிலும் அலுவலர்கள் எடுக்க வாய்ப்பு இல்லை. எனவே விவசாயிகள் மண் பரிசோதனைக்கு மண் எடுத்து தர அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பரிசோதனைக்கு மண் எடுக்க சில வழிமுறைகள் உள்ளது. எனவே விவசாயிகளுக்கு அதற்கான பயிற்சி வழங்க வேளாண் துறை முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக பயிற்சி வழங்க ஒவ்வொரு வட்டாரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு செயல்படுத்தவில்லை.

மண் பரிசோதனை மொபைல் வாகனம் மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டதாக அறிவித்தனர். வட்டாரத்திற்கு ஒரு நாள் வீதம் வாகனம் சென்று மண் பரிசோதனை செய்து முடிவுகளை தெரிவிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பல மாதங்களை கடந்தும் அந்த வாகனமும் வரவில்லை. எனவே வேளாண்துறை, விவசாயிகளுக்கு மண் பரிசோதனைக்கென மண் எடுப்பது பற்றிய பயிற்சியை வழங்க முன்வர வேண்டும்.

Advertisement