தேனி குறைதீர் கூட்டத்திற்கு டீசல் கேனுடன் வந்த பெண் போலிஸ் நடவடிக்கை இல்லை என புகார்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு டீசல் கேனுடன் வந்த பெண்ணிடம் போலீசார் டீசலை பறிமுதல் செய்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்புத்திட்ட மாவட்ட அலுவலர் சாந்தி, கலெக்டர் நேர்முக உதவியாளர் முகமது அலிஜின்னா, மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிசெல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் 314 மனுக்களை வழங்கினர்.

மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் நிர்வாகி தர்மராஜன் வழங்கிய மனுவில், 'வாழ்வாதார இயக்க பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஊதியத்தை வங்கி கணக்கு மூலம் வழங்க வேண்டும். பிறத்துறை பணிகள் சுமத்துவதை தவிர்க்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டிருந்தது.

கொடைக்கானல் தாண்டிக்குடி கணேஷ்பாபு மனுவில், ' பெரும்பாலன ஊராட்சிகளில் நடக்கும் கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க அதிகாரிகள் வருவதில்லை. ஊராட்சி உறுப்பினர்களும் பங்கேற்பதில்லை. கூட்டம் நடக்கும் இடம் பற்றி பொதுமக்களுக்கு தெளிவாக தெரிவிப்பதில்லை. கிராம சபை கூட்டம் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். என இருந்தது.

டீசல் கேனுடன் வந்த பெண்கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில் மனு அளிக்க வருபவர்களை சோதனை செய்து உள்ளே அனுமதித்தனர். அபபோது மனு அளிக்க வந்த பெண் ஒருவர் போலீசாரை கண்டதும், அவர்களை பார்காதது போல் வேகமாக சென்றார். அவரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டு வந்திருந்த கைப்பையில் ஒரு கேனில் குடிநீர், மற்றொரு கேனில் டீசல் இருந்தது. டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரனையில், அவர் உசிலம்பட்டி ஒத்த தோட்டம் பகுதி மாரியம்மாள் என தெரிந்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது, ஆண்டிபட்டி ஏத்தகோவில் பகுதியில் சொந்த நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு செல்ல விடாமல் குறிப்பிட்ட சமூகத்தினர் தடுக்கின்றனர். என்னை வெட்டி காயப்படுத்தினர். அவர்கள் மீது போலீசில் புகார் அளித்தும் பயனில்லை. அதனால் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தேன் என்றார். போலீசார் மனு அளிக்க ஏற்பாடு செய்து அனுப்பினர்.

Advertisement