கும்மிடிப்பூண்டியில் பரவும் மர்ம காய்ச்சல் சுகாதார சீர்கேட்டை சுட்டி காட்டிய கவுன்சிலர்கள் சுகாதார சீர்கேட்டை சுட்டி காட்டிய கவுன்சிலர்கள் 

கும்மிடிப்பூண்டி,: கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் ஷகிலா தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் பாஸ்கரன், துணை தலைவர் கேசவன் முன்னிலை வகித்தனர்.

பிறப்பு, இறப்பு, வரவு, செலவு, வரி வசூல், வரி நிலுவை, கோரிக்கைகள், திட்ட அனுமதி உள்ளிட்டவை மீது, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கவுன்சிலர்கள் சிலர் கோரிக்கைகளை முன் வைத்து பேசினர்.

அப்துல்கரீம் -- தி.மு.க.,: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. குப்பை மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால், கொசுக்கள் அதிகரித்து சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.

இதனால், நாளுக்கு நாள் நோய் பரவலும் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே குற்றச்சாட்டை முன் வைத்து மற்ற கவுன்சிலர்களும் பேசினர்.

காளிதாஸ் -- தி.மு.க.,: நான்கு வார்டு மக்களுக்கு பொதுவாக உள்ள கோரிமேடு சுடுகாடு முழுதும் புதர்கள் சூழ்ந்துள்ளன. அங்கு தண்ணீர் வசதியும், முறையான பாதை வசதியும் ஏற்படுத்த வேண்டும்.

கருணாகரன் -- தி.மு.க.,: மழைக்காலங்களில் ரெட்டம்பேடு சாலையும் அதை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கும் நிலை ஏற்படுகிறது.

அதனால், பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து மேட்டு தெரு ஓடை வரை உடனடியாக கால்வாய் அமைக்க வேண்டும். எம்.எஸ்.ஆர்., கார்டன் குடியிருப்பு பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.

பாஸ்கரன் - செயல் அலுவலர்: கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement