இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல்: 30 பேர் பலி: பதற்றம் அதிகரிப்பு

1

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் டெல் அவிவ் நகரில் 30 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, அந்நாட்டு மக்கள், குண்டு துளைக்காத முகாம்களுக்குள் தஞ்சமடைந்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.


காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை தொடர்ந்து, லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல். அந்த அமைப்பின் தலைவர் நஸ்ருல்லாவை விமானப்படை மூலம் குண்டு வீசி கொன்றது. அதேநேரத்தில் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளது. இருப்பினும் லெபனான் தெற்கு எல்லையில், ராணுவத்தினரை குவித்த இஸ்ரேல், ஹிஸ்புல்லாக்கள் மீது தாக்குதலை துவக்கி உள்ளது.

ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. அதேநேரத்தில் ஈரான் - இஸ்ரேல் இடையேயும் மோதல் போக்கு நிலவுகிறது.

இதனிடையே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாகவும், இதற்காக அந்நாடு கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்கா எச்சரித்து இருந்தது.


இந்நிலையில் காசா, லெபனான் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. டெல் அவிவ் நகர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் 30 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தி உள்ளது. மக்களும் குண்டுதுளைக்காத முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

Advertisement