மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவதி

திருவொற்றியூர்,
திருவொற்றியூர் மண்டலத்தில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். எட்டு நகர்ப்புற நல வாழ்வு மையங்கள், ஆறு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் 100 படுக்கை வசதிக் கொண்ட மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இந்நிலையில், நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. எட்டு பணியிடங்களுக்கு, ஓரிரு மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போல், ஆறு ஆரம்ப சுகாதார மையங்களில், ஒரு மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது. தவிர, மண்டலம் முழுதும், 14 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு ஏழு பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

இதன் காரணமாக, ஒரு சுகாதார ஆய்வாளர், இரண்டு வார்டுகளை கவனிக்க வேண்டிய சூழல் உள்ளது.

மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து, மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோமதி, தமிழரசன், கவீ. கணேசன் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர்.

அப்போது, மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என, மண்டல நல அலுவலர் லீனா தகவல் தெரிவித்தார்.

இந்நிலையில், குடிநீர், மின்சாரம் என, பல்வேறு துறைகளில் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவினாலும், வடகிழக்கு பருவமழைக்கு, சுகாதார துறையில் அதிகாரிகள், மருத்துவர் பற்றாக்குறை நிலவினால், பெரும் சிக்கல் ஏற்படும்.

மழைக்காலத்தில் பரவும், கிருமி தொற்று மற்றும் நோய்களுக்கு, உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், மருத்துவர் மற்றும் சுகாதார அதிகாரிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement