மின் கம்பங்களில் விளம்பர பேனர்கள்; கண்ணை மூடி கொண்டு செல்லும் அதிகாரிகள்

புதுச்சேரி : புதுச்சேரியில் மின் கம்பத்தில் விளம்பர பேனர் கட்டும் கலாசாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

புதுச்சேரியில் தலைவிரித்தாடிய பேனர் கலாசாரம் நீண்ட நெடும் போராட்டத்திற்கு பின் சற்று கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.

பேனர் கலாசாரத்தை ஊக்குவித்த அரசியல்வாதிகள், கோர்ட் தலையீட்டால் சற்று அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், டியூசன் சென்டர்கள், துணி கடைகள், கல்யாண கோஷ்டிகள் சாலையோர மின் கம்பங்களில் பேனர் கட்டும் கலாசாரத்தை துவக்கியுள்ளனர்.

புதுச்சேரி முழுதும் மொத்தம் 55,000 மின் கம்பங்கள் உள்ளது.

நகர பகுதி மின்கம்பங்களில் பேனர் வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.

பேனர்கள் காற்றில் ஆடி, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

லாஸ்பேட்டையில் நீதிபதிகள் குடியிருப்பு முன்பு உள்ள மின்கம்பங்கள் உட்பட அனைத்து மின்கம்பங்களிலும் விளம்பர பேனர்கள் கட்டியுள்ளனர்.மின்துறை அதிகாரிகள் அனைவரும் நகர பகுதி சாலை வழியாக அலுவலகம் செல்கின்றனர்.

இவர்களின் கண்களில், மின் கம்பத்தில் கட்டி வைத்துள்ள பேனர்கள் தெரியவில்லையா? பேனர் கட்டி வைத்துள்ளவர்கள் குறித்து போலீசில் புகார் அளித்தால் அடுத்த முறை மின் கம்பத்தில் பேனர் கட்ட தயங்குவர்.

ஆனால் மின்துறை அதிகாரிகள் இதனை கண்டும் காணாமல் செல்வதால் புதுச்சேரி முழுதும் மின் கம்பத்தில் விளம்பர பேனர் கட்டுவது அதிகரித்து வருகிறது.

எனவே, மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுத்து மின் கம்பங்கள் மீது கட்டியுள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும்.

பேனர் கட்டும் நிறுவனங்கள் மீது போலீசில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும்.

Advertisement