சிகிச்சைக்கு வரும் பெண்களை விரட்டியடிக்கும் அவலம்

கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் அதிகளவில் பரவி வருவதால், மருத்துவமனைக்கு அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். ஒவ்வொரு டாக்டரிடமும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். அவ்வாறு நிற்கும்போதே நெடுநேரம் ஆகிவிடுகிறது.

10.30மணிக்கு மேல் நோயாளிகள் பார்ப்பதில்லை என அங்கு பணியில் இருக்கும் செக்யூரிட்டிகள் பெண்களை நிற்ககூட விடாமல் விரட்டி விடுகின்றனர். வலிக்கொடுமை உள்ளிட்ட உபாதையால் அவதிப்படும் பெண்கள் செய்வதறியாமல் கூக்குரலிடுகின்றனர். நேற்று முன்தினம் காலை வெளியூரை சேர்ந்த வயது முதிர்ந்த பெண் ஒருவர், 101வது வார்டில் காலை 10:00 மணியில் இருந்து டாக்டரை பார்க்க வரிசையில் காத்திருந்தார். அப்போது, 10:30 மணி ஆகிவிட்டது. அங்கிருந்த செக்யூரிட்டி, மருத்துவமனை என்று கூட பார்க்காமல் நேரம் கடந்துவிட்டது, இனிமேல் டாக்டரை பார்க்க முடியாது. நாளை காலை வந்து பாருங்கள் என விரட்டியுள்ளார். வரிசையில் நின்றிருந்த பலரும் அதே பாணியில் விரட்டப்பட்டுள்ளனர்.

ஏழை பெண்கள் உடல்நிலை முடியாத நிலையில் டாக்டரை பார்க்க வந்தால், அவர்களை விரட்டுவது கொடுமையிலும், கொடுமை. எனவே போதியளவு பெண் மருத்துவர்களை நியமித்து, அவசரமாக வரும் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் முன் வரவேண்டும்.

Advertisement