வங்கதேசத்தினருக்கு போலி ஆதார்; அரசு டாக்டரிடம் விசாரணை நிறைவு

5


திருப்பூர்: திருப்பூரில் வங்கதேசத்தினர் போலி ஆதார் கார்டு பெற்ற விவகாரத்தில், அரசு டாக்டர், ஆதார் மைய பெண் ஊழியர் ஆகியோரிடம் போலீசார் விசாரணையை நிறைவு செய்தனர்.


திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த தன்வீர் அகமது, அகமது மம்மூஸ் உட்பட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இருவரும் வங்கதேசத்தில் உறவினரை கொலை செய்து விட்டு, இந்தியாவுக்கு தப்பி வந்தது தெரிந்தது.

கடந்த, ஒரு ஆண்டுக்கு முன், அருள்புரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர், இ-சேவை மையம் மூலம் ஆதார் கார்டு பெற்று கொடுத்தது தெரிந்தது. அவர் மீது போலி ஆவணங்கள் தயாரிப்பு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.



வங்கதேசத்தினருக்கு ஆதார் கார்டு பெற சான்று வழங்கிய பல்லடத்தை சேர்ந்த அரசு டாக்டர், மாநகராட்சி வளாகத்தில் உள்ள இ-சேவை மையம் தற்காலிக பெண் ஊழியர் மற்றும் பேன் கார்டு வாங்கி கொடுத்த நபர் என, மூன்று பேரிடம் விசாரிக்க திட்டமிட்டு, போலீசார் தரப்பில் சம்மன் கொடுத்தனர்.

விசாரணை நிறைவு



இச்சூழலில், ஆதார் கார்டு பெற சான்று வழங்கிய டாக்டர், பெண் ஊழியர் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜாரானார்கள். அதில், சம்பந்தப்பட்ட வங்கதேசத்தினருக்கு ஆதார் கார்டுக்கு பெற மாரிமுத்து விண்ணப்பத்துடன் சென்றார். அவர்களை நேரில் பார்க்காமல் டாக்டர் சான்று கொடுத்தது தெரிந்தது. அவர்கள் வங்கதேசத்தினர் என்ற விபரம் தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

அவர்களிடம் பெற்ற வாக்குமூலம் அனைத்தும், குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட உள்ளது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

துறைகளுக்கு பரிந்துரை



இதுகுறித்து திருப்பூர் மாநகர போலீசார் கூறியதாவது:

வங்கதேசத்தினர் கைது செய்த விவகாரத்தில், ஆதார் கார்டு பெற்று கொடுத்த மாரிமுத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் கிடைத்த தகவலின் படி, சான்று வழங்கிய அரசு டாக்டர், இ-சேவை மைய பெண் ஊழியர் ஆகியோருக்கு சம்மன் கொடுத்து விசாரித்தோம்.



விண்ணப்பதாரர்கள், வங்கதேசத்தினர் என்பது தெரியாது என்று சொன்னவர்கள், கொண்டு வந்த விண்ணப்பத்தில் நேரில் பார்க்காமலே டாக்டர் கையெழுத்து போட்டு கொடுத்தது தெரிந்தது. இதனை தங்களுக்கு தெரியாது என்று மறுத்தாலும், அவர்கள் செய்தது தவறு. விசாரணை மற்றும் வாக்கு மூலம் குறித்து குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்படும்.


துறை ரீதியான நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாரிமுத்து மூலம் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க வைத்திருந்த, 11 விண்ணப்பம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement