சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் இத்தனை நன்மையா; காஷ்மீர் தேர்தலில் ஓட்டளித்த மக்கள் சொல்வதைக் கேளுங்க!

21


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தேர்தலில் முதல்முறையாக ஓட்டளித்த, பாகிஸ்தானில் இருந்து வந்த ஹிந்து அகதிகள், 'கூண்டில் அடைக்கப்பட்டிருந்த பறவை விடுவிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.


ஜம்மு - காஷ்மீரில், 10 ஆண்டுகளுக்கு பின் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. 24 தொகுதிகளுக்கு, செப்., 18ல் நடந்த முதற்கட்ட தேர்தலில், 61.38 சதவீத ஓட்டுகளும்; 26 தொகுதிகளுக்கு, செப்., 25ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், 57.31 சதவீத ஓட்டுகளும், மூன்றாம் மற்றும் கடைசி கட்ட தேர்தலில், 68.72 சதவீத ஓட்டுகளும், பதிவாகின.


சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தேர்தலில் முதல் முறையாக, பாகிஸ்தானில் இருந்து வந்த ஹிந்து அகதிகள், வால்மீகிகள், கூர்க்காக்கள் உள்ளிட்டோர் ஓட்டளித்தனர். மேற்கு பாகிஸ்தான் அகதிகள் சம்பா உள்ளிட்ட மாவட்டங்களில் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.


தேர்தலில் முதல்முறையாக ஓட்டளித்த, பாகிஸ்தானில் இருந்து வந்த ஹிந்து அகதிகள் கூறியதாவது: 'கூண்டில் அடைக்கப்பட்டுள்ள பறவை விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த எழுபது ஆண்டுகளாக எங்கள் சமூகத்திற்கு ஓட்டளிக்கும் உரிமை இல்லை' என தெரிவித்தனர்.



மோடிக்கு நன்றி!




ஹிந்து அகதிகள் தலைவர் லாப ராம் காந்தி கூறியதாவது: சட்ட பிரிவு 370ஐ ரத்து செய்து, எங்களை காஷ்மீர் குடி மக்களாகவும் வாக்காளர்களாகவும் மாற்றிய பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.


கடந்த 75 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரில் தேவையற்ற குடிமக்களாக வசித்து வந்த நாங்கள், வரலாற்றில் முதல் முறையாக சட்டசபை தேர்தலில் பங்கேற்கிறோம். இப்போதுதான் எங்கள் கனவு நிஜமாகியுள்ளது. நாங்கள் இப்போது ஜம்மு காஷ்மீரின் குடிமக்கள் மற்றும் வாக்காளர்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


மிக்க மகிழ்ச்சி!




காஷ்மீரில் நடந்த இறுதி கட்ட தேர்தலில் முதல் முறையாக ஓட்டளித்த 50 வயதான நபர் கூறியதாவது: நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு 50 வயது ஆகிறது. நான் இப்பொழுது முதல் முறையாக ஓட்டளித்து உள்ளேன். மேற்கு பாகிஸ்தான் அகதிகள், வால்மீகிகள் மற்றும் கூர்க்கா சமூகத்தினர் இப்போது வாக்களிக்க முடியும். இப்போது பல விஷயங்கள் மாறி வருகின்றது என்றார்.


சம்பாவில் உள்ள நுந்த்பூர் ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்த 63 வயதான அகதித் தலைவர் கூறியதாவது: 'ஜம்மு காஷ்மீர் குடிமக்களாகவும், வாக்காளர்களாகவும் ஆவதற்கு எங்களை மாற்ற, சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததற்காக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு நன்றி," என்று அவர் கூறினார்


துணிச்சலான முடிவு




கூர்க்கா சமூக தலைவர் கருணா சேத்ரி கூறியதாவது: எங்கள் அதிர்ஷ்டத்தை இங்கு மாற்றியமைத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 370வது பிரிவைத் திரும்பப் பெறுவதற்கான அவர்களின் துணிச்சலான முடிவுக்கு நன்றி.

நாங்கள் இப்போது காஷ்மீர் குடிமக்கள் மற்றும் அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ளோம். நாங்கள் முதன்முறையாக சட்டசபை தேர்தலில் ஓட்டளித்தோம். இது எங்களுக்கு பெருமையான தருணம். நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,". இவ்வாறு அவர் கூறினார்.


வரலாற்று தருணம்




வால்மீகி சமூக தலைவர் கவுரவ் பதி கூறியதாவது: இப்போது நாங்கள் ஜம்மு காஷ்மீர் குடிமக்களாக இருப்பதால், வாக்களிக்கும் உரிமை மற்றும் மாநிலத்தின் வழக்கமான குடிமக்கள் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளும் எங்களிடம் உள்ளன. சட்டசபை தேர்தல் எங்களுக்கு ஒரு வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.


எங்கள் சமூக உறுப்பினர்களும் இப்போதே தேர்தலில் போட்டியிடத் தொடங்குவார்கள். புதிய வேலை வாய்ப்புகளை நாம் இப்போது ஆராயலாம். இது நீண்ட கால தாமதமாகிவிட்டது. எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. வால்மீகி சமூகம் ஓட்டளிக்கும் செயல்முறையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல்கள் வால்மீகி சமூகத்திற்கு வரலாற்று தருணம். இவ்வாறு அவர் கூறினார்.


சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம், குடிமக்கள் என்ற உரிமை எங்களுக்கு கிடைத்துள்ளது, அரசு வேலைவாய்ப்பு, நிலம் வாங்குதல் போன்றவற்றிற்கும் இப்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, வால்மீகி, கூர்க்கா சமூகத்தினரும், மேற்கு பாகிஸ்தான் அகதிகளும் தெரிவித்துள்ளனர்.

Advertisement