கசிவது ரத்தம் மட்டுமல்ல கண்ணீரும்தான்..



கடல் என்பது பலரை வாழவைத்துக் கொண்டிருக்கும் தாய்.

கஷ்டமோ நஷ்டமோ தன்னை நம்பியவர்களை கைவிடாது.
Latest Tamil News
நமக்கு தெரிந்ததெல்லாம் கடலுக்கு சென்று மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை விற்கும் பெண்கள் மட்டுமே.

நமக்கு தெரியாதது அந்த மீன்களையும் மற்றும் கடல் சார்ந்த பொருட்களையும் விற்க பெண்கள் படும்பாடு . Latest Tamil News

அவர்களின் சிரமங்களை எத்தனையோ பேர் அவரவர் கேமரா வழியாக சொல்லியிருக்கின்றனர் ஆனால் அவர்களைப் பற்றி அவர்களே சொன்னால் எப்படியிருக்கும்..என்று மதுரை புகைப்படக்கலைஞர் பழனிக்குமார் சிந்தித்தார்.
Latest Tamil News
ஒடிசா மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவ குடியிருப்புகளைச் சேர்ந்த ஆர்வமுள்ள பெண்களை தேர்வு செய்து, அவர்களுக்கு புகைப்படம் எடுக்க மூன்று மாதகாலம் பயிற்சி கொடுத்தார்,பின்னர் நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களின் வாழ்வியலை எப்படி கேமரா வழியாகச் சொல்ல நினைக்கிறீர்களோ அதன்படி சொல்லுங்கள் என்று கூறி கேமராவுடன் அனுப்பிவைத்தார்.

மொத்தம் 16 பெண்கள் இந்த இரண்டு இடங்களிலும் எடுத்த 400 புகைப்படங்களை தொகுத்து 'கடல் சொல்லும் கதைகள்' என்ற தலைப்பில் கடந்த வாரம் சென்னை லலித்கலா அகாடமியில் கண்காட்சியாக நடத்தினர்.

பல படங்கள் தொழில்முறை புகைப்படக்கலைஞர்கள் எடுத்தது போலவே நேர்த்தியாக இருந்தது, படங்கள் கலை அழகு கோணம் இதை எல்லாம் தாண்டி அவர்களின் வலியை உணரும்படியாக இருந்ததுதான் அருமை.

இந்த படங்களின் பின்னால் உள்ள பெண் புகைப்படக்கலைஞர்கள் யார் அவர்கள் எந்த பின்னனியில் இப்படிப்பட்ட படங்களை எடுத்துள்ளனர் என்பது போன்ற விவரங்களை எளிமையான அதே நேரம் மனதை தைக்கும் விதத்தில் தமிழில் எழுதிவைத்திருந்தது பாராட்டுக்குரியதாகும்.

அன்றாடம் சுமார் இருநுாறு ரூபாய் வருமானத்திற்காக காலையில் இருந்து மாலை வரை வெயிலில் தலையில் துணியைப் போட்டுக் கொண்டு, வாயில் ஒரு பையை கவ்விக்கொண்டு, கடலின் சகதிக்குள் வாழும் கூனி என்ற சிறிய ரக இரால் மீனை பிடிப்பதற்காக, சகதியை பிதுக்கிக் கொண்டே கடலுக்குள் ஊறிக்கிடக்கும் நாகை கடற்கரை
ஒர மீனவ பெண்களின் படமும், அவர்களின் நிஜக்கதையும் பார்ப்பவர் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது.

அதே போல அலை எந்த நேரம் வீட்டை விழுங்குமோ என்ற பயத்துடனேயே அலை அரிக்கும் வீடுகளில் வாழும் மக்களின் படங்கள் மிரளச்செய்தது.

இந்த கண்காட்சியை நன்கொடையாளர்கள் உதவியுடன் பல ஊர்களில் நடத்த வேண்டும் அப்போதுதான் மீன் வாங்கும் போது மீனில் இருந்து கசிவது மீனின் ரத்தம் மட்டுமல்ல மீனவ பெண்களின் கண்ணீரும்தான் என்பதை உணர்வர்.

-எல்.முருகராஜ்

Advertisement