பும்ரா மீண்டும் 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா, மீண்டும் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.
டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 870 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். வங்கதேசத்துக்கு எதிரான கான்பூர் டெஸ்டில் 'வேகத்தில்' மிரட்டிய இவர், 6 விக்கெட் சாய்த்தார். தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் (869 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். வங்கதேச தொடரில் இருவரும் தலா 11 விக்கெட் சாய்த்தனர். இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (809), குல்தீப் யாதவ் (672) முறையே 6, 16வது இடத்தில் நீடிக்கின்றனர்.


ஜெய்ஸ்வால் 'நம்பர்-3': பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 792 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 'நம்பர்-3' இடத்துக்கு முன்னேறினார். வங்கதேச தொடரில் பேட்டிங்கில் அசத்திய ஜெய்ஸ்வால், 3 அரைசதம் உட்பட 189 ரன் குவித்தார். விராத் கோலி (724), 12வது இடத்தில் இருந்து 6வது இடத்தை கைப்பற்றினார்.

கான்பூர் டெஸ்டில் ஏமாற்றிய இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷாப் பன்ட் (718), 6வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கேப்டன் ரோகித் சர்மா (693), சுப்மன் கில் (684) முறையே 15, 16வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.

'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (468), அஷ்வின் (358) முதலிரண்டு இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

Advertisement