மொசாட் தலைமை அலுவலகம் அருகே, மிகப்பெரிய பள்ளம்

ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலில், இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாட் தலைமை அலுவலகம் அருகே, மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள டெல் அவிவ் நகரின் முக்கிய பகுதியில் செயல்பட்டு வரும் இந்த அலுவலகத்தில் இருந்து, 5,000 அடி தொலைவில், 30 அடி ஆழம், 50 அடி அகலத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

டெல் நோப் உளவுப் பிரிவு அலுவலகம், நெட்சாரிம் ராணுவ தளம், நெவாடிம் விமான தளம் ஆகியவற்றை குறி வைத்து, தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில், நெவாடிம் விமான தளத்தில் இருந்த 'எப் -35' ரக ஜெட் விமானங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில், லெபனானின் பெய்ரூட் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஜெட் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதால், நெவாடிம் விமான தளத்தை ஈரான் குறி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

'இந்த தாக்குதலில், இஸ்ரேலிய குடிமக்களை குறி வைப்பதை ஈரான் தவிர்த்துள்ளது. அதேசமயம், ஈரான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தினால், எங்களின் நிலைப்பாடு மாறும்' என ஈரான் ராணுவ தளபதி முகமது பாகேரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலை மிரளவைத்த பள்ளம்!



பட்டா - 2 ஏவுகணை

இந்த தாக்குதலில், 1,500 கி.மீ., துாரம் வரை துல்லியமாக தாக்கும் பட்டா - 2 ஏவுகணைகளை ஈரான் முதன்முறையாக பயன்படுத்தியுள்ளது. நீண்டதுார பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணைகள், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றியுள்ளது. ஹெச்.ஜி.வி., எனப்படும் ஹைப்பர்சோனிக் க்ளைடு வெஹிக்கிள் பொருத்தப்பட்ட பட்டா - 2 ஏவுகணைகள், எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. பயணத்தின் போதே பாதையை மாற்றியமைக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணையில் திசை கட்டுப்பாட்டுக்காக, கோள வடிவ திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதில், பொருத்தப்பட்டுள்ள ஏரோ - டைனமிக் கட்டுப்பாட்டு மேற்பரப்புகள், இவற்றை வளிமண்டலத்தின் வெளியேயும் பறக்க உதவுகின்றன.

Advertisement