நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு: கிராம சபை கூட்டங்களில் எதிர்ப்பு

தமிழகம் முழுதும் பெரும்பாலான ஊராட்சிகளில், நேற்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில், தங்கள் ஊராட்சியை அருகில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கக் கூடாது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 506 கிராம ஊராட்சிகளை, அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இணைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பெரும்பாலான ஊராட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், நேற்று அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தங்கள் ஊராட்சியை, அருகில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


துாத்துக்குடி மாநகராட்சியில், ஏழு ஊராட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, கோரம்பள்ளம், மாப்பிள்ளையூரணி, முல்லக்காடு ஊராட்சிகளில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவற்றில் தி.மு.க.,வை சேர்ந்தவர்களே ஊராட்சி தலைவர்களாக உள்ளனர்.


மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, மன்னம்பந்தல், ரூரல் ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, தாயனுார் ஊராட்சி கிராம சபையை, பொது மக்கள் புறக்கணித்தனர்.


நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சியுடன் சமயசங்கிலி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோல் பல்வேறு மாவட்டங்களில், ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்க, மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஊராட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்பட்டால், 100 நாள் வேலை திட்டம் பறிபோகும்; வரிகள் உயரும் என்பதால், ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement