டி.வி.ஆருக்கு மணிமண்டபம் தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை:'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவை போற்றும் வகையில், தமிழக அரசு அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என, அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., கன்னியாகுமரி மாவட்டத்தில், 1908 அக்., 2ல் பிறந்தவர். கடந்த 1951 செப்., 6ல் திருவனந்தபுரத்தில் 'தினமலர்' நாளிதழை துவக்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தை, தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டத்தில், முக்கிய பங்கு வகித்தார்.

'தினமலர்' நாளிதழ் வழியாக புரட்சி செய்தவர். குமரி மாவட்ட போராட்டத்திற்கு, தமிழர்களின் குரலாக, 'தினமலர்' ஒலித்தது என்ற குற்றச்சாட்டின் கீழ், திருவனந்தபுரம் உயர் நீதிமன்ற நீதிபதி சங்கரன் முன்னிலையில், அவர் ஒரு நாள் முழுதும் விசாரிக்கப்பட்டார்.

அவரது முயற்சியால், குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. இன்று தென் மாவட்டங்கள், கல்வியில் சிறந்து விளங்க, முக்கிய பங்காற்றினார். அவரது நினைவை போற்றும் வகையில், தமிழக அரசு அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement