புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்

திருப்பூர் : திருப்பூர் ஏ.வி.பி., கல்விக்குழுமம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பல அமைப்பினர் சார்பில், புற்றுநோய் தவிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் நடத்தப்பட்டது.இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நேற்று காலை, 6:10 மணிக்கு அங்கேரிபாளையம் பகுதியில் துவங்கிய மாரத்தான் மற்றும் வாக்கத்தான், பி.என்., ரோடு வரை, 5 கி.மீ., துாரம் சென்றது.

ரோட்டரி மாவட்ட கவர்னர் சுரேஷ்பாபு, மாநகர போலீஸ் இணை கமிஷனர் அசோக் கிரிஷ் யாதவ், திருப்பூர் பொதுநல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மொத்தம், 3,750 பேர் இதில் பங்கேற்றனர். பின், பள்ளிக் குழந்தைகள், புற்றுநோய் தவிர்ப்பு முத்திரை வடிவில் நின்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் வாயிலாக திரட்டப்பட்ட, 15 லட்சம் ரூபாய், திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும், புற்றுநோய் நவீன சிகிச்சை மைய கட்டுமானப்பணிக்கு, பங்களிப்பு தொகையாக வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில், ஏ.வி.பி., கல்வி அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன், ரோட்டரி நிர்வாகிகள் இளங்குமரன், தனசேகர், பூபதி, ஜெயராமன், ஆனந்த்ராம், ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

மக்களிடம் இருந்து பங்களிப்பு தொகை வசூலிக்கும் பணியை ரோட்டரி அமைப்பினர் செய்து வருவதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement