மெஸ்சி '46' கோப்பை: கால்பந்து அரங்கில் சாதனை

கொலம்பஸ்: அர்ஜென்டினாவின் மெஸ்சி, கால்பந்து அரங்கில் 46 கோப்பை வென்று சாதனை படைத்தார்.

அமெரிக்காவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இன்டர் மியாமி, கொலம்பஸ் அணிகள் மோதின. இதில் இன்டர் மியாமி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்டர் மியாமி சார்பில் மெஸ்சி 2 (45, 45+5வது நிமிடம்), லுாயிஸ் சாரஸ் (48வது) ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
லீக் சுற்றில் விளையாடிய 32 போட்டியில், 20 வெற்றி, 8 'டிரா', 4 தோல்வி என 68 புள்ளிகளுடன் இன்டர் மியாமி அணி முதலிடத்தை கைப்பற்றியது. இதன்மூலம் முதலிடத்துக்கான 'சப்போர்டர்ஸ் ஷீல்டை' முதன்முறையாக கைப்பற்றியது இன்டர் மியாமி.


மெஸ்சி முதலிடம்: இது, கால்பந்து அரங்கில் மெஸ்சி வென்ற 46வது கோப்பை ஆனது. இதில், ஒரு உலக கோப்பை (2022, அர்ஜென்டினா), இரண்டு 'கோபா அமெரிக்கா' கோப்பை (2021, 2024, அர்ஜென்டினா), மூன்று 'கிளப்' உலக கோப்பை (2009, 2011, 2015, பார்சிலோனா), நான்கு சாம்பியன்ஸ் லீக் (2005-06, 2008-09, 2010-11, 2014-15, பார்சிலோனா) கோப்பை அடங்கும்.
இதன்மூலம் கால்பந்து அரங்கில் அதிக கோப்பை வென்ற வீரர்கள் வரிசையில் மெஸ்சி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் பிரேசிலின் டேனியல் ஆல்வ்ஸ் (44 கோப்பை) உள்ளார்.

Advertisement