மழைநீர் வடிகால்வாய் பணிகளை பருவமழைக்குள் முடிக்க அறிவுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, வேளிங்கப்பட்டரையில் இருந்து ஓரிக்கை வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், முக்கிய சாலை சந்திப்புகளில் விடுபட்ட கால்வாய் பணியை முடிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், வேளிங்கப்பட்டரையில் இருந்து, ஓரிக்கை வரை 600 மீட்டர் நீளத்திற்கு விடுபட்ட இடங்களிலும், மாநகராட்சி சார்பில், அமைக்கப்பட்ட சிறிய கால்வாய் அகற்றப்பட்டு 1.50 மீட்டர் அகலம், 1.50 மீட்டர் ஆழத்திற்கு மூடி வசதியுடன் கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் துவங்கி நடந்து வருகிறது.

இதேபோல, காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், 1 மீட்டர் அகலமுள்ள கால்வாயை 1.20 மீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தி கால்வாய்க்கு, கான்கிரீட் தளம் அமைக்கவும், கால்வாய்க்கு இணைப்பு இல்லாத பகுதியில் இணைப்பு ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.

காஞ்சிபுரத்தில் அவ்வப்போது பெய்த மழையின் காரணமாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக வடிகால்வாய் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னை வட்டம், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார், காஞ்சிபுரம் உட்கோட்ட பிரிவில் நடைபெறும் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை மற்றும் ரயில்வே சாலையில் நடைபெறும் வடிகால்வாய் கட்டுமானப் பணியை நேற்று ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் மழைநீர் வடிகால்வாய் பணியை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement