வெள்ள பாதிப்பிலிருந்து காப்பாற்ற 10,000 தன்னார்வலர்களுக்கு அழைப்பு

சென்னை, சென்னையில் கடந்த, 2023ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில், வேளச்சேரி, கிண்டி, பள்ளிக்கரணை, மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அந்த பகுதிகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர, 10 நாட்கள் வரை ஆனது.

இதனால், இந்தாண்டிற்கான, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. பருவமழை காலங்களில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற, தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறியதாவது:

மழைக்கால நிவாரண பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற ஏற்கனவே, 1,300 தன்னார்வலர்கள் மாநகராட்சியுடன் இணைந்துள்ளனர். மேலும், 10,000 தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள், https://gccservices.chennaicorporation.gov.in/volunteer என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அவர்களின் அனுபவம், வசிக்கும் மண்டலத்தை பொருத்து, மண்டல அலுவலர்கள் வாயிலாக பணிகள் ஒதுக்கப்படும். இதன் வாயிலாக, மழை காலங்களில், புது முகங்கள் இல்லாமல், ஏற்கனவே பழக்கப்பட்டவர்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

36 படகுகள்!



மாநகராட்சி மழைநீர் வடிகால் கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன் கூறியதாவது:

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடிய பகுதிகளாக, 40க்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, 1.26 கோடி ரூபாயில், 36 படகுகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒரு வட்டாரத்திற்கு 12 படகுகள் ஒதுக்கப்படும். முதற்கட்டமாக வந்த ஆறு படகுகள், மாதவரம், பெருங்குடி மண்டலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்புகள் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள, மணலி, மாதவரம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களில், அதிக படகுகள் தயார் நிலையில் வைக்கப்படும்.

தேவைக்கேற்ப, மீனவர்களின் படகுகளும் பயன்படுத்தப்படும். மேலும், சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கிய, தள்ளக்கூடிய மிதவை படகும் பயன்படுத்த ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement