* தென்மேற்கு பருவமழை 35 சதவீதம் கூடுதலால் விவசாயிகள்...மகிழ்ச்சி! : * 63.9 செ.மீ., மழையால் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், செப்டம்பர் மாதத்தோடு தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில், நடப்பாண்டில் இயல்பைவிட 35 சதவீதம் அதிகமாக பதிவாகியிருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு மாதங்களில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 63.9 செ.மீ., மழை பதிவாகியுள்ளதால், பல ஏரிகளில், நீர் இருப்பு அதிகமாகவே உள்ளது.

தென்மேற்கு பருவமழை காலமான, ஜூன், ஜூலை, ஆக., செப்., ஆகிய நான்கு மாதங்களில் பெய்யும் மழையை வைத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா, சொர்ணாவாரி ஆகிய பருவங்களில், நெல் பயிரிடப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் முற்றிலும் வறண்டு போன ஏரிகளுக்கு, ஜூன், ஜூலை மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழை ஓரளவு கை கொடுக்கிறது.

அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த தென்மேற்கு பருவமழை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயல்பைவிட அதிகளவில், இந்தாண்டு பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு 32.8 செ.மீ., மழை இயல்பாக பெய்ய வேண்டும். ஆனால், 18 சதவீதம் கூடுதலாக பெய்து, 38.9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், நடப்பாண்டு கூடுதலாக மழை பெய்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட அளவில், 2021ல், 48.5 செ.மீ., மழை சராசரியாக பொழிந்துள்ளது. 2022ல் 32.4 செ.மீ., மழையும், 2023ல் 78.1 செ.மீ., மழையும், 2024ல் 63.9 செ.மீ., மழையும் கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டைவிட நடப்பாண்டு, தென்மேற்கு பருவமழை அதிகமாக மழை பொழிந்துள்ளது. அதாவது, தென்மேற்கு பருவமழை பொறுத்தவரை 47.2 செ.மீ., மழை இயல்பாக பெய்ய வேண்டும். 35 சதவீதம் கூடுதலாக பெய்து, 63.9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கூடுதலாக இம்முறை மழை பெய்திருப்பதால் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆக., - செப்., ஆகிய நான்கு மாதங்களில், அதிகபட்சமாக ஆகஸ்டில் 21.8 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நான்கு மாதங்கள் பெய்த மழை காரணமாக, நீர்வள ஆதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், தற்போது 2 ஏரிகளில் 100 சதவீத நீர் இருப்பு உள்ளது. மீதமுள்ள ஏரிகளில் 53 ஏரிகளில் 75 சதவீதமும், 75 ஏரிகளில் 50 சதவீதமும், 117 ஏரிகளில் 25 சதவீத தண்ணீர் கையிருப்பு உள்ளது. மீதமுள்ள 134 ஏரிகளில், 25 சதவீதத்திற்கும் குறைவாக தண்ணீர் இருப்பதாக, நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். அக்டோபரில் பெய்யக்கூடிய வடகிழக்கு பருவமழையால் இந்த ஏரிகள் நிரப்பும் என்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏற்கனவே, 11 துறை அலுவலர்கள் கொண்ட, 21 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, 72 மழை பாதிப்பு இடங்கள் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் புகார் அளிக்க, கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட உள்ளன. மணல் மூட்டைகள், மழைக்கால தடுப்பு கருவிகள் தயாராக உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மழைநீர் கால்வாய்கள் துார்வாரப்படுகின்றன.

நிவாரண பணிகளை முடுக்கி விடவும், மீட்பு பணிகளில் இறங்கவும், நலத்திட்டங்களை வழங்க சமூக வலை தளங்கள் உதவியாக உள்ளன. இதற்காக, கடந்தாண்டு சமூக வலை தளங்கள் பெரிதும் அதிகாரிகளுக்கு உதவியது.

மழை பாதிப்பு தொடர்பான புகார்களை எளிதாக தெரிவிக்க, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலை தளங்களில், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான பக்கங்களில், புகார் அளிக்கலாம் என, பேரிடர் மேலாண்மை துறையினர் தெரிவிக்கின்றனர்.

சமூக வலை தளங்களில், மழை பாதிப்பு குறித்த தெரிவித்த புகார்களுக்கு, கடந்தாண்டுகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




ஆண்டு வாரியாக சராசரியாக பெய்த மழையளவு - செ.மீ.,



மாதம் 2021 2022 2023 2024

ஜூன் 5.7 0.8 19.5 18.6

ஜூலை 17.8 7.3 8.8 14.6

ஆகஸ்ட் 14.2 20.2 16.5 21.8

செப்டம்பர் 10.8 3.9 33.2 9.7

மொத்தம் 48.5 32.4 78.1 63.9

Advertisement