ரயிலில் இருந்து தவறி விழுந்து கடலுார் வாலிபர் உயிரிழப்பு

சென்னை, கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்தவர் பாலமுருகன், 24. இவர், ராயபுரத்தில் மீன் கடையில் வேலை செய்து வந்தார்.

சொந்த ஊர் செல்ல, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட வைகை விரைவு ரயிலில் நேற்று முன்தினம் ஏறினார். முன்பதிவில்லாத பெட்டியின் படியில் அமர்ந்து பயணம் செய்தார்.

ரயில் சைதாப்பேட்டை நிலையத்தை அடைந்தபோது, பாலமுருகனின் கால் நடைமேடையில் உரசியுள்ளது. இதில், 150 மீட்டர் துாரம் வரை இழுத்து செல்லப்பட்டார். நிலைதடுமாறி கீழே விழுந்தவர், நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாம்பலம் ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மாணவர் பலி



பொன்னேரி அடுத்த பெரியகாவணம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சத்ரியன், 21. இவர், மீஞ்சூரிலுள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாமாண்டு படித்தார்.

நேற்று காலை 8:00 மணியளவில் கல்லுாரி செல்ல, வீட்டருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது, ஆந்திர மாநிலம் நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியது.

பலத்த காயமடைந்த சத்ரியன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement