காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் 8.7 கிலோ தங்க மோசடி வழக்கு விசாரணையை துவக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பயன்பாட்டில் உள்ள உற்சவர் சிலை தொன்மையானது. ஆனால், இச்சிலை, 2015ல் புதிதாக ஹிந்து சமய அறநிலையத் துறையால் செய்யப்பட்டது. இச்சிலையை செய்ததில், மோசடி நடந்ததால், போலீசில் அண்ணாமலை என்பவர், சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, 2017ல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், ஹிந்து சமய அறநிலையத் துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி, கோவில் அர்ச்சகர்கள் என, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. புதிய உற்சவர் சிலைகள் செய்தபோது, 5 சதவீதம் தங்கம் சேர்க்க வேண்டும் என்பது விதி. அதாவது, 8.7 கிலோ தங்கம் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், இரு புதிய சிலைகளிலும், தங்கம் சேர்க்கப்படவில்லை என, முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் அழைத்து வந்த ஐஐடி குழுவினர் ஆய்வு செய்ததில் தெரியவந்தது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இவ்வழக்கை விசாரித்த நிலையில், உயர் நீதிமன்றம் அதிருப்தியடைந்து, மீண்டும் சிவகாஞ்சி போலீசார் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது.

அதன்படி, சிவகாஞ்சி போலீசார் இவ்வழக்கை விசாரித்து, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், கடந்தாண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

குற்றப்பத்திரிக்கையில், கோவில் செயல் அலுவலர் முருகேசன் மற்றும் சிலை செய்த ஸ்தபதி மாசிலாமணி ஆகிய இருவரை நீக்கியும், ஹிந்து சமய அறநிலையத் துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி மற்றும் கூடுதல் கமிஷனர் கவிதா உள்ளிட்டோர் மீது சிவகாஞ்சி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவு செய்து, 7 ஆண்டுகளாகிறது.

இத்தனை ஆண்டுகளுக்கு பின், நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. ஆனால், இன்னும் விசாரணை துவங்கவில்லை. விரைவில், இந்த வழக்கின் விசாரணை, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் துவங்க வேண்டும் என, காஞ்சிபுரம் பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து, இவ்வழக்கின் புகார்தாரர் அண்ணாமலை கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, போலீசார், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை, கடந்தாண்டு தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிக்கையில், ஸ்தபதி மாசிலாமணி மற்றும் செயல் அலுவலர் முருகேசன் ஆகிய இருவர் பெயர் நீக்கம் செய்யப்பட்டது சம்பந்தமாக, என்னிடம் நீதிமன்றம் கருத்து கேட்டது.

அதற்கு, இருவர் பெயரும் நீக்கியதற்கு ஆட்சேபனை தெரிவித்து கடந்தாண்டு மனு அளித்துள்ளேன். இரண்டாவது முறையாக, குற்றப்பத்திரிக்கையில் பெயர் நீக்கம் செய்தது தொடர்பாக, நீதிமன்றம் என்னிடம் இரு மாதங்கள் முன்பாக கருத்து கேட்டுள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரித்து, தீர்வு கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement