வெண்கலம் வென்றார் குஷி: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில்

லிமா: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை குஷி வெண்கலம் வென்றார்.

பெருவில், உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான தனிநபர் 50 மீ., 'ரைபிள்-3 பொஷிசன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் குஷி, 585.29 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான அனுஷ்கா (585.26 புள்ளி), சாக் ஷி (581.28), ஜோயல் கிளாட்சன் மெல்வினா ஏஞ்சலின் (580.18), பிராச்சி கெய்க்வாட் (575.21) முறையே 11, 24, 32, 41வது இடம் பிடித்தனர்.

அடுத்து நடந்த பைனலில், 447.3 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த குஷி, வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். நார்வேயின் பெர்க் (458.4 புள்ளி), கரோலின் (458.3) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.

பெண்கள் அணிகளுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிசன்ஸ்' பிரிவில் சாக் ஷி (581.28), ஜோயல் கிளாட்சன் மெல்வினா ஏஞ்சலின் (580.18), பிராச்சி கெய்க்வாட் (575.21) அடங்கிய இந்திய அணி 1757.95 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்தது.
இதுவரை 10 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என 15 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

Advertisement