சதம் விளாசினார் அபிமன்யு ஈஸ்வரன்: 'ரெஸ்ட் ஆப் இந்தியா' பதிலடி

லக்னோ: இரானி கோப்பையில் 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணியின் அபிமன்யு ஈஸ்வரன் சதம் கடந்தார்.

உ.பி.,யின் லக்னோவில், இரானி கோப்பை கிரிக்கெட் 61வது சீசன் நடக்கிறது. இதில் மும்பை, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் விளையாடுகின்றன. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 536/9 ரன் எடுத்திருந்தது. சர்பராஸ் (221) அவுட்டாகாமல் இருந்தார்.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் முகேஷ் குமார் 'வேகத்தில்' முகமது ஜுனேத் கான் (0) போல்டானார். மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. சர்பராஸ் கான் (222) அவுட்டாகாமல் இருந்தார். 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி சார்பில் முகேஷ் 5 விக்கெட் சாய்த்தார்.

அபிமன்யு அபாரம்: பின் முதல் இன்னிங்சை துவக்கிய 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (9) ஏமாற்றினார். சாய் சுதர்சன் (32), இஷான் கிஷான் (38) ஆறுதல் தந்தனர். தேவ்தத் படிக்கல் (16) நிலைக்கவில்லை. தனிநபராக அசத்திய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் சதம் கடந்து கைகொடுத்தார்.
ஆட்டநேர முடிவில் 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 289 ரன் எடுத்திருந்தது. அபிமன்யு (151), துருவ் ஜுரெல் (30) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் மோகித் அவஸ்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement