குப்பை கொட்டுவோருக்கு அபராதம் தனி குழு அமைத்த தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம், பெருங்களத்துார் - மதுரவாயலை இணைக்கும் புறவழிச்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளின் வசதிக்காக, அணுகு சாலை போடப்பட்டுள்ளது.

இச்சாலையை ஒட்டி குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவது அதிகரித்துவிட்டது.

தவிர, பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில் அணுகு சாலையை ஒட்டி, குடியிருப்புகளில் இருந்து அகற்றப்படும் செப்டிக் டேங்க் கழிவை கொட்டி நாசப்படுத்துகின்றனர்.

இச்செயலில் ஈடுபடும் மர்ம கும்பலால், சாலையை ஒட்டியுள்ள குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படுகின்றனர்.

மாநகராட்சி நிர்வாகமும், போலீசாரும் அவ்வப்போது பெயருக்காக கழிவுநீர் லாரிகளை பிடிப்பதும், சில நாட்கள் கழித்து வழக்கம் போல், கண்ட இடத்தில் கழிவை கொட்டுவதும் தொடர் கதையாகிவிட்டது.

இந்நிலையில், அணுகு சாலையை ஒட்டி குப்பை, இறைச்சி கழிவு மற்றும் கழிவுநீர் கொட்டுவதை தடுக்கும் வகையில், தனியாக ஒரு வாகனம், மூன்று ஊழியர்களை நியமித்து, மாநகராட்சி நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

யாராவது குப்பை, கழிவை கொட்டினால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் இந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இந்தாண்டு ஜனவரியில் இருந்து செப்., வரை, 57,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

Advertisement