நாய்க்கும், நரிக்கும் பதிலளிக்க வேண்டுமா? மிரட்டல் புகார் குறித்து குமாரசாமி கோபம்

பெங்களூரு: கட்சி நிர்வாகியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, '' தெரு நாய்க்கும், நரிக்கும் பதிலளிக்க வேண்டுமா,'' என்று மத்திய அமைச்சரும், ம.ஜ.த., தலைவருமான குமாரசாமி கூறினார்.


ம.ஜ.த.,வின் முன்னாள் நிர்வாகியான விஜய் டாடா என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர், பெங்களூருவில் உள்ள அம்ருதஹள்ளி போலீஸ் ஸ்டேசனில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ம.ஜ.த., எம்.எல்.சி., ரமேஷ் கவுடா என்பவர், தனது வீட்டிற்கு என்னை வரவழைத்து மத்திய அமைச்சர் குமாரசாமியிடம் மொபைல்போனில் பேச வைத்தார். அப்போது, இடைத்தேர்தலுக்கு ரூ.50 கோடி கொடுக்க வேண்டும் என குமாரசாமி என்னிடம் கூறினார்.
அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தேன். அதற்கு கோபமடைந்த குமாரசாமி, பணத்தை ஏற்பாடு செய்யாவிட்டால், பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உயிருக்கும், ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் ஆபத்து வரும் எனக்கூறி மிரட்டல் விடுத்தார்.


இதன் பிறகு ரமேஷ் கவுடா, என்னிடம், ரூ.50 கோடியை குமாரசாமியிடம் கொடுக்க வேண்டும். எனக்கு ரூ.5 கோடி வேண்டும் எனக்கூறி மிரட்டல் விடுத்தார். எனக்கும், குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.


இது தொடர்பாக குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது: எனக்கு எதிராக போலீசில் அளித்த புகார் குறித்து நான் பேச மாட்டேன். அதை பற்றி நான் ஏன் பேச வேண்டும். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தெருநாய்களும், நரிகளும் சொல்லும் குற்றச்சாட்டுக்கு நான் பதில் சொல்ல வேண்டுமா? அவர்கள் என் மீது வழக்குப்பதிவு செய்யட்டும், மற்றவற்றை நான் பார்த்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிலையில், பணம் கேட்டு மிரட்டியதாக குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement