ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 4,832 பக்க குற்றப்பத்திரிக்கையில் அதிர்ச்சி தகவல்!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 28 பேர் மீதும் செம்பியம் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 4,832 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகை, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணி



பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விசாரித்த போலீசார், பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேரை கைது செய்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் போலீசில் இருந்து தப்பி ஓட முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைமறைவாக இருந்த சீசிங் ராஜா சமீபத்தில் கைது செய்யப்பட்டு என்கவுண்டர் செய்யப்பட்டார்.

முக்கிய குற்றவாளிகளான சம்போ செந்தில் மற்றும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

அவர்களும் பிடிபட்டால் ஆம்ஸ்ட்ராங் கொலையின் சதித்திட்டம், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்த பல்வேறு தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 28 பேர் மீதும், செம்பியம் காவல்நிலைய போலீசார் 4,832 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏ1 ஆக ரவுடி நாகேந்திரனும், ஏ2 ஆக ரவுடி சம்போ செந்திலும் ஏ3 ஆக வழக்கறிஞர் அஸ்வத்தாமன் ஆகியோரை சேர்த்துள்ளனர்.

ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருந்து கொண்டே திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய மகன் அஸ்வத்தாமன் வழக்கறிஞராக இருந்து வரும் நிலையில், அவரின் வளர்ச்சிக்கு ஆம்ஸ்ட்ராங் தடையாக இருப்பதாக கருதியுள்ளார்.

ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் ஆம்ஸ்ட்ராங் தலையிடுவதாகக் கூறி, இந்த படுபயங்கர செயலை செய்ததால் ஏ1 குற்றவாளியாக நாகேந்திரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொலைக்கு கூலிப்படையை தயார் செய்து திட்டம் தீட்டியதாக தலைமறைவாக இருக்கும் சம்போ செந்தில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்கிராப் தொழிலில் ஈடுபட்டு வந்த சம்போ செந்திலுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் இடையே தொழிற்போட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் இந்த கொலை வழக்கில் மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆற்காடு சுரேஷ் மைத்துனரும் வழக்கறிஞருமான அருள் மூலம் அஸ்வத்தாமன் இந்த கொலைக்கு ஆட்களை ஏவியதாகவும் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement