3 மாதங்களுக்கு கவனமுடன் பணியாற்றுங்கள் வடக்கு வட்டார துணை கமிஷனர் அறிவுறுத்தல்

திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கலந்தாலோசனை கூட்டம், மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நேற்று காலை நடந்தது.

இதில், வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மண்டல உதவி கமிஷனர் சுரேஷ் உள்ளிட்ட, மாநகராட்சி மற்றும் பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், கவுன்சிலர்கள் பங்கேற்று, தங்கள் பகுதியில் மழைநீர் தேங்கும் இடங்கள், தேவையான உபகரணங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

அதன்படி, 28.51 சதுர கி.மீ., பரப்பளவில், திருவொற்றியூர் மண்டலம் உள்ளது. இங்கு, 3.23 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆறு பேருந்து வழித்தடங்கள் உட்பட, 1,577 சாலைகள் உள்ளன. தவிர, 3 லட்சம் அடி துாரத்திற்கு மழைநீர் வடிகால்கள் உள்ளன. 13,618 தெருவிளக்குகள் உள்ளன.

கட்டா ரவி தேஜா பேசுகையில், ''மண்டலத்தில், 4, 6, 7 ஆகிய வார்டுகள் கடுமையாக மழையால் பாதிக்கும். கடந்த முறை, துார் வாரப்படாத மழைநீர் வடிகால்களால் தான் பிரச்னை ஏற்பட்டது. இம்முறை அப்படி ஏற்படக் கூடாது.

நிவாரண முகாம்கள், உணவு கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அடுத்து மூன்று மாதங்கள் மிக கவனமுடன் செயல்பட வேண்டும். மின்மோட்டர்கள் இயக்கம், தினசரி சரிபார்க்க வேண்டும். பணிகள் குறித்து, செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

நிவாரண பணிகளுக்கு படகுகள் தேவைப்பட்டால், இங்கேயே ஏற்பாடு செய்ய முடியும். மழை காலத்தில் மின் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.

நீர்வளத்துறை அதிகாரிகள் பகிங்ஹாம் கால்வாயை முறையாக கண்காணிக்க வேண்டும். - - கே.பி.சங்கர் எம்.எல்.ஏ.,திருவொற்றியூர்.

Advertisement