'கோரமண்டல்' தொழிற்சாலையை 5,000 பேருடன் முற்றுகையிடுவோம் 'மாஜி' எம்.எல்.ஏ., பேச்சு

திருவொற்றியூர்,
எண்ணுார் அடுத்த பெரியகுப்பத்தில் 'கோரமண்டல்' உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. கடந்தாண்டு, இந்த தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.

இதனால், பகுதிவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் ஆய்வு செய்து தொழிற்சாலைக்கு பூட்டு போட்டனர். சீரமைப்பு பணிகள் முடிந்து, சமீபத்தில் தொழிற்சாலை திறக்கப்பட்டது.

இதை கண்டித்து, எர்ணாவூர் குப்பம், திருவொற்றியூர் குப்பம், திருச்சிணாங்குப்பம் உட்பட, 12 மீனவ கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், நேற்று மதியம், முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குப்பன் தலைமையில் நடந்தது.

இதுகுறித்து, கூட்டத்தில், அவர் பேசியதாவது:

எண்ணுார், பெரியகுப்பம் பகுதியில் செயல்படும் கோரமண்டல் தொழிற்சாலையில், டிச., 26ம் தேதி, அமோனியா குழாயில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு, 100க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்ட, 21 விதிகளை நிவர்த்தி செய்யாமல், வெறும் நான்கு கிராம மக்களுக்கு பணம் கொடுத்து ஆலையை திறந்துள்ளனர்.

வாயு கசிவு ஏற்பட்ட குழாயை மாற்றாமலே, கோரமண்டல் தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வழக்கறிஞர் மூலம், விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' விடப்பட்டு, 15 நாட்களாகி விட்டன.

எந்த விளக்கமும் தரவில்லை. எனவே, நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.

தவிர, அமோனியா இறக்குமதி செய்யும் கப்பல் வந்தால், ஆழ்கடலிலேயே 500 படகுகள் மூலம் முற்றுகையிடவும், ஆலை திறப்பை கண்டித்து விரைவில், 5,000 பேரை திரட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு, குப்பன் பேசினார்.

Advertisement