பங்கு சந்தை கடும் வீழ்ச்சி ரூ.11 லட்சம் கோடி 'அவுட்'

மும்பை:மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் நேற்று கடும் வீழ்ச்சி கண்டன. இதனால், முதலீட்டாளர்கள் ஒரே நாளில், 11 லட்சம் கோடி ரூபாயை இழந்து உள்ளனர்.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு, பதிலடி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இது, மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் துவங்கி உள்ளது.

இதன் தாக்கம், நேற்று காலை வர்த்தகம் துவங்கிய போது, இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.

சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக முதலீட்டை திரும்ப பெறுதல், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும், சந்தை மேலும் சரிந்தது.

நேற்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1,800 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி, 550 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்தன.

பங்குச் சந்தை வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்கள்:

ஈரான் -- இஸ்ரேல் மோதல்: இம்மாதம் 1ம் தேதி, இஸ்ரேல் மீது ஈரான், 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரப்போவதாக இஸ்ரேல் எச்சரித்து உள்ளது.

இரு நாடுகளும் மீண்டும் தாக்குதலில் இறங்கினால், கச்சா எண்ணெய் வினியோகம் தடைபடும் என்ற அச்சம் நிலவுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால், வினியோகம் தடைபடலாம் என்ற அச்சம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

இதனால், அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுள் ஒன்றான இந்தியாவில், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

செபி புதிய விதி: பியூச்சர் மற்றும் ஆப்ஷன் பிரிவில், ஒப்பந்த எண்ணிக்கையை சந்தை கட்டுப்பாட்டாளரான 'செபி' குறைத்ததுடன், கட்டணத்தை அதிகரித்துள்ளது. இது, சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

அன்னிய முதலீட்டாளர்கள்: இந்திய சந்தைகள் தொடர் உச்சம் தொட்டதால், பங்குகள் விலை உயர்ந்திருக்கின்றன. இதனால், லாபத்தை பெற, பங்குகளை விற்று அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர்.

உலகளாவிய சந்தை போக்கு: உலகளாவிய சந்தைகளின் செயல்பாடுகள் சரிவை கண்டு வருவதும், முதலீட்டாளர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது.

Advertisement