ஒட்டன்சத்திரத்தில் இரட்டிப்பான தக்காளி விலை

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை இரட்டிப்பாகி கிலோ ரூ.30ல் இருந்து ரூ. 61 ஆக உயர்ந்தது.

ஒட்டன்சத்திரம் சுற்று பகுதிகளில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது. நல்ல மகசூல் கிடைக்கும் என்பதால் ஒட்டு ரகங்களையே விவசாயிகள் விரும்பி விளைவிக்கின்றனர்.

தரையில் விளைவிக்கப்படும் தக்காளி மழை, வெயிலுக்கு தாங்காது என்பதால் தற்போது பந்தல் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது.

சில நாட்களாக மார்க்கெட்டில் இதன் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து கிலோ ரூ.30க்கு விற்பனையானது.

தற்போது வரத்து குறைந்து தேவை அதிகரித்துள்ளதால் விலை அதிகரித்து நேற்று கிலோ ரூ.61க்கு விற்றது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கமிஷன் கடை உரிமையாளர் முருகேசன் கூறியதாவது: ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் வெளி மாவட்டங்களில் தக்காளி அறுவடை முடிந்த நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதியில் இன்னும் அறுவடை தொடர்கிறது. இதனால் வெளிமாநிலங்கள், தமிழகத்தின் மற்ற மாவட்ட வியாபாரிகள் தக்காளியை அதிகமாக கொள்முதல் செய்கின்றனர். இதனால் தக்காளி விலை அதிகரித்துள்ளது என்றார்.

வெள்ளமடத்துப்பட்டி விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது:

ஒரு மாதத்திற்கு முன்பு இதே தக்காளி கிலோ ரூ.10 க்கு விற்றது. தற்போது அறுவடை முடியும் நிலையில் கிலோ ரூ. 60க்கு மேல் விற்கிறது என்றார்.

Advertisement