கிணற்றில் கம்பி குத்தி போராடிய விவசாயி மீட்பு

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து கம்பி குத்திய நிலையில் உயிருக்கு போராடிய விவசாயியை தீயணைப்புத் துறையினர் போராடி உயிருடன் மீட்டனர்.

சிங்கம்புணரி அருகே மு.சூரக்குடி ஊராட்சி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரபு 40 விவசாயி. இவரும் இவரது நண்பரும் அக். 2ம் தேதி இரவு வயலில் பயிருக்கு காவலுக்கு இருந்துள்ளனர். கோயில் மாடுகள் பயிர்களை மேய வந்தபோது அதை விரட்டி சென்றுள்ளனர். அப்போது பிரபு அங்கிருந்த 100 அடி ஆழ தரைமட்ட கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

தண்ணீர் இல்லாத கிணற்றில் 40 அடி ஆழத்தில் நீட்டிக்கொண்டிருந்த கம்பி பிரபுவின் தொடை மற்றும் வயிறு பகுதியில் குத்தியவாறு சிறிய பக்கவாட்டுச் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு அவரது நண்பர் உடனடியாக சிங்கம்புணரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று ஏணி, கயிறு மூலம் ஆபத்தான கிணற்றுக்குள் இறங்கினர்.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிரபுவை குத்தியிருந்த கம்பியை அகற்றிவிட்டு அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement