ஊராட்சிகளில் குடிநீர் தரப் பரிசோதனையில் சுணக்கம்; பொதுசுகாதாரத்துறை கண்காணிக்குமா

கம்பம், : தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் குடிநீர் தரப்பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று உள்ளாட்சிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் குடிநீர் மாதிரிகள் எடுத்து பரிசோதிக்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மாதந்தோறும் குடிநீர் மாதிரிகளை வைகை அணையில் உள்ள குடிநீர் வாரிய ஆய்வகத்தில் கொடுத்து பரிசோதிப்பார்கள்.

இதில் குடிநீரில் குளோரின் முறையாக கலக்கப்பட்டிருக்கிறதா, குடிக்க உகந்ததா என்று ஆய்வு செய்வார்கள்.

ஆனால் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், ஊராட்சிகளில் சாம்பிள் எடுத்து திருநெல்வேலியில் உள்ள பொதுச் சுகாதார துறையின் கீழ் இயங்கும் குடிநீர் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆனால் அதில் சுணக்கம் நிலவுகிறது.

பேரூராட்சிகள்,நகராட்சிகளில் ஆண்டிற்கு 3 முறை வழக்கமாக தரப்பரிசோதனை செய்கின்றனர். ஊராட்சிகளில் ஆண்டிற்கு ஒரு முறை அதுவும் மேலோட்டமாக பார்க்கப்படுகிறது.

வைகை அணையில் உள்ள குடிநீர் வாரியத்தின் ஆய்வகத்தில் முழு அளவிலான பரிசோதனைகள் செய்ய வசதி இல்லை.

திருநெல்வேலி மண்டல பகுப்பாய்வு மையத்தில் தான் முழு அளவில் பரிசோதிக்க முடியும். மேலும் குடிநீர் பரிசோதனைகளை பொதுச் சுகாதாரத் துறை தான் மேற்கொள்ள வேண்டும்.

தேனி மாவட்ட ஊராட்சிகளிலும் குடிநீர் தர பரிசோதனை செய்வதில் தொடர்ந்து சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரிக்காமல் சப்ளை செய்யப்படுகிறது.

ஊராட்சிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரை முழு அளவில் பரிசோதிக்க பொதுச்சுகாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement