தானப்பத்திரம் பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளருடன் வாக்குவாதம்; போலீசார் பேச்சுவார்த்தை

தேனி, : தான செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்யாமல் கால தாமதம் செய்த தேனி சார்பதிவாளருடன், விண்ணப்பதாரர், அவரது மகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தனர்.

தேனி நகராட்சி சிவாஜி நகர் வனஜா 60. இவரது மகன் ஜெகதீசன் 37. தாய் வனஜா, சிவாஜி நகரில் உள்ள ரூ.14 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள காலியிடத்தை, தான செட்டில்மென்ட் முறையில் மகன் ஜெகதீசனுக்கு பத்திரப்பதிவு செய்ய முடிவு செய்தார். கடந்த செப்., 29ல் தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய ஆவணங்களை சமர்ப்பித்தார். இதில் சொத்துப் பதிவுக்கான மூலப்பத்திரம்' இல்லை என, சார்பதிவாளர் மாரீஸ்வரி தெரிவித்து, பதிவுக்கான ஆவணங்களை தள்ளுபடி செய்தார். இதனால் விண்ணப்பதாரர் வனஜா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்து பதிவுக்கு உத்தரவிட கோரினார். பதிவுக்கு மூலப்பத்திரம் அவசியம் இல்லை என்பதால், ஐகோர்ட் அக்., 1 முதல் ஒருவார காலத்திற்குள் தேனி சார்பதிவாளர் தான செட்டில்மென்ட் பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால், நேற்று விண்ணப்பதாரர் வனஜா, பதிவுக்கு ஆவணங்களை சமர்பித்தார். முதல் டோக்கன் பெற்றார். தேனி சார்பதிவாளர், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு கிடைக்க வில்லை. அட்வகேட் ஜெனரலின் ஆலோசனை பெறாமல் பதிவு செய்ய முடியாது என்றார். இதனால் விண்ணப்பதாரர் வனஜா, அவரது மகன் ஜெகதீசன் சார்பதிவாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சார்பதிவாளர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த தேனி எஸ்.ஐ., கண்ணன் தலைமையிலான போலீசார் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சார்பதிவாளர் கடிதத்தில், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரிடம் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசனை பெற்று பதிவு செய்யப்படும் என்றார். பின் கலைந்து சென்றனர்.

Advertisement