ஏ.டி.எம்., கொள்ளையன் சேலம் மருத்துவமனைக்கு மாற்றம்

கோவை: கால் அகற்றப்பட்ட ஏ.டி.எம்., கொள்ளையில் ஈடுபட்ட நபர் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த மாதம் ஏ.டி.எம்., களை உடைத்து பணத்தை கும்பல் ஒன்று கொள்ளையடித்தது. பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய காரை, கன்டெய்னர் லாரியில் எடுத்து செல்லும் போது நாமக்கல் போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கொள்ளையன் ஜூமாந்தீனை போலீசார் சுட்டுக் கொன்றனர். தப்ப முயன்ற அசர் அலி என்பவரை போலீசார் சுட்டத்தில் அவரின் காலில் குண்டு பாய்ந்தது. அவர் சிகிச்சைக்காக கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் அவரின் வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இந்நிலையில், அவர் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement