இஸ்ரேல் வெளியிட்ட இந்திய வரைபடம் நீக்கம்!

2

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் இல்லாமல் இஸ்ரேல் வெளியிட்ட இந்திய வரைபடம் சர்ச்சையான நிலையில், அந்த படம் நீக்கப்பட்டு உள்ளது.



ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் மீதான தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேல், ஈரான் நாடுகளிடையேயான போர், உலகளவில் 3வது உலகப்போராக வர்ணிக்கப்படுகிறது. போரானது மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பரவலாம் என்ற அச்சமும் ஏற்பட்டு உள்ளது. பயங்கரவாதம் உள்ளிட்ட விவகாரங்களில், இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் வரைபடத்தை இஸ்ரேல் அரசு இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது. ஆனால் அந்த படத்தில், ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமானது போன்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் இந்த படம் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் இந்த விவாதம் பேசு பொருளாக மாறிவிட, இணையதளத்தில் விமர்சனங்கள், கேள்விகள் எழுந்தன. இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகத்தின் கவனத்துக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, இணையதளத்தில் பதிவேற்றியவரின் தவறு, சுட்டிக்காட்டியதற்கு நன்றி, இந்த படம் நீக்கப்பட்டு விட்டது என்று இஸ்ரேல் தூதரகம் அறிவித்துள்ளது.

Advertisement