மானத்தை வாங்கியது மஹாராஷ்டிரா அரசு; மீதிப்பணம் கேட்டு சுவிஸ் நிறுவனம் நோட்டீஸ்

4

மும்பை: மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அமைச்சர்கள், உலக பொருளாதார அமைப்பு மாநாட்டிற்காக சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த போது ஆனதற்கான செலவில் பாக்கி உள்ள தொகையை செலுத்தும்படி அந்நாட்டு சேவை நிறுவனம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், கடந்த ஜனவரி மாதம் உலக பொருளாதார அமைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க அங்கு சென்ற, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சில அமைச்சர்கள் ஜன.,15 முதல் 19 வரை தங்கியிருந்தனர்.



இதற்காக அவர்களுக்கு அளிக்கப்பட்ட சேவைக்கு இன்னும் ரூ.1.58 கோடி கட்டண பாக்கி உள்ளது. இதை செலுத்தும்படி, சுவிட்சர்லாந்தின் சேவை துறையை சார்ந்த நிறுவனம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாநில தொழில் வளர்ச்சி கழகம், முதல்வர் அலுவலகம், உலக பொருளாதார அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டீசில், அவர்களின் பயணத்திற்கு ஆன மொத்த செலவில் ரூ.3.75 கோடி மட்டும் செலுத்தப்பட்ட நிலையில், எஞ்சிய ரூ.1.58 கோடியை செலுத்தும்படி கூறப்பட்டு உள்ளது.


இதனையடுத்து மாநில அரசை கடுமையாக விமர்சிக்க துவங்கி உள்ள எதிர்க்கட்சிகள், முதல்வரின் சுவிட்சர்லாந்து பயணத்தில் அதிக செலவு செய்யப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளன.

Advertisement