பத்திரிகையாளர்கள் மீது வழக்கு: உ.பி., அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

8


புதுடில்லி: '' அரசை விமர்சித்து எழுதினார்கள் என்ற காரணத்திற்காக மட்டும், பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யக்கூடாது,'' என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உ.பி.,யைச் சேர்ந்த உபாத்யாய் என்ற பத்திரிகையாளர், ' யாதவ ராஜ்ஜியம் VS தாக்கூர் ராஜ்ஜியம்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். இதனை வைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த கட்டுரைக்காக உபாத்யாய்க்கு அகிலேஷ் பாராட்டு தெரிவித்தார்.
இதன் பிறகு தனக்கு பல இடங்களில் இருந்து மிரட்டல் வந்ததாக கூறிய உபாத்யாய், இது குறித்து போலீசாருக்கு 'எக்ஸ் ' சமூக வலைதளம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.


அதற்கு போலீசார், 'பொய்யான தகவல் பரப்பி சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும்' என பதிலளித்து இருந்தனர். தொடர்ந்து அவர் மீது ஐ.டி., சட்டப்படி பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உபாத்யாய் வழக்கு தொடர்ந்தார்.


இதனை விசாரித்த நீதிபதிகள் ரிஷிகேஷ் மற்றும் எஸ்விஎன் பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, '' ஜனநாயக நாட்டில் ஒருவரின் கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும். இந்திய அரசியல்சாசனத்தின் 19(1)(a) ஆகிய பிரிவுகளின்படி, பத்திரிகையாளர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளது. எழுத்துகள் மூலம் அரசை விமர்சிக்கிறார்கள் என்ற காரணத்திற்காக மட்டும் பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யக்கூடாது'' என்றனர்.


மேலும், உபாத்யாய் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்ததுடன், உ.பி., அரசு மற்றும் போலீசார் பதிலளிக்க சம்மன் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Advertisement