தெப்பத்தில் நீர் குறைவால் திண்டாடும் மீன்கள்

ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் தெப்பத்தில் தேங்கிய நீர் கடந்த சில மாதங்களில் மழை இல்லாததால் நீர் மட்டம் குறைகிறது. தெப்பத்தில் வளரும் மீன்கள் குறைந்த அளவு இருப்பு நீரில் பரிதவிக்கின்றன.

கடந்த ஆண்டு இக்கோயில் புனரமைப்பு பணியில் உபயதாரர் மூலம் பல லட்சம் செலவில் தெப்பமும் சீரமைக்கப்பட்டு, ஜூலை 12 ல் கும்பாபிஷேகம் முடிந்தது.

கோயில் வளாகத்தில் கிடைக்கும் மழை நீர் தெப்பத்தில் சேரும்படி வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் மழை பெய்தால் தெப்பம் விரைவில் நிரம்பி விடும். கடந்த ஆண்டு தெப்பத்தில் நூற்றுக்கணக்கான மீன் குஞ்சுகள் விடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக மழை இன்றி தெப்பத்தில் இருந்த நீர் வற்றி வருகிறது. இதனால் தற்போது வளர்ந்த மீன்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பகலில் வெயிலின் தாக்கத்தால் குறைந்த அளவுள்ள நீரில் மீன்கள் திண்டாடுகின்றன.

கோயில் கிணற்று நீரை மோட்டார் மூலம் பம்ப் செய்து தெப்பத்தில் தேக்கி மீன்களை பாதுகாக்க பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். மழைக்காலம் துவங்க இருப்பதால் தெப்பத்தில் மழைநீரும் விரைவில் தேங்கும் வாய்ப்புள்ளது.

Advertisement