இந்திய திரைப்பட விழா புதுச்சேரியில் துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரியில் இந்திய திரைப்பட விழா அலையன்ஸ் பிரான்சிஸ் கலை அரங்கில் நேற்று துவங்கியது.

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் இணைந்து, ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்துவது வழக்கம். இந்தாண்டிற்கான இந்தியத் திரைப்பட விழா அலையன்ஸ் பிரான்சிஸ் கலை அரங்கில் நேற்று துவங்கியது.

செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்செல்வன் வரவேற்றார். அமைச்சர் லட்சுமிநாராயணன், அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் சதீஷ் நல்லாம், நவதர்ஷன் திரைப்படக்கழக செயலர் பழனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு அழைப்பளராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு கடந்த 2022ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட 'குரங்கு பெடல்' படத்தின் இயக்குனர் கமலக்கண்ணணுக்கு, சங்கரதாஸ் சுவாமிகள் விருது, ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

விழாவில் அரசு செயலர் கேசவன், சினிமா இயக்குனர் ராசி அழகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவினை தொடர்ந்து குரங்கு பெடல் திரைப்படம் திரையிடப்பட்டது. நாளை 5ம் தேதி ஆர்.ஆர்.ஆர் (தெலுங்கு), 6ம் தேதி அரியிப்பு (மலையாளம்), 7ம் தேதி டோனிக் (வங்காளம்), 8ம் தேதி மேஜர்(இந்தி) ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

Advertisement