மகிழ்ந்தால் மகிழ்ந்து... அழுதால் அழுது...

''எதிர்பார்ப்பு ஏதுமின்றி, நீங்கள் சிரித்தால் சிரித்து, அழுதால் கண்ணீர் வடித்து, நிழலாய் பின்தொடரும் செல்லப்பிராணிகள், அதன் சராசரி ஆயுட்காலத்தை தாண்டி, உங்களோடு ஆரோக்கியமாக பயணிக்க வேண்டுமெனில், அதை முறையாக பராமரிப்பது அவசியம்,'' என்கிறார், பெட் குரூமர் ரவிபிரவீன்குமார்.

சென்னை, சோழிங்கநல்லுாரில் உள்ள, ' பிங்கி பாஸ்' பெட் ஸ்பா உரிமையாளரான இவர், பப்பியை எப்படி பராமரிக்க வேண்டுமென்ற டிப்ஸ்களை நம்மோடு பகிர்ந்தார். அவை:

 பப்பிக்கான அனைத்து தடுப்பூசிகளும் போடும் வரை, வெளியிடங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்ப்பது நல்லது. பிறந்து இரு மாதங்களுக்கு பிறகு, குளிப்பாட்ட துவங்கினால் போதும்.

 அதிக முடி கொண்ட ப்ரீட்களை, இரு வாரங்களுக்கு ஒருமுறையும், மற்ற வகை பப்பிகளை மாதத்திற்கு ஒருமுறையாவதும் குளிப்பாட்ட வேண்டும்.

 குளிக்க வைக்கும் போது, காதுகளை சுத்தம் செய்தல், நகங்களை வெட்டிவிடுவது அவசியம். இதில் முன் அனுபவம் இல்லாதவர்கள், 'பெட் ஸ்பா' செல்வதே சிறந்தது.

 வீட்டிலேயே குளிப்பாட்டுவதாக இருந்தால், பப்பிக்கான பிரத்யேக ஷாம்பு, லோஷன் கடைகளில் கிடைக்கின்றன. இதை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

 தினசரி வீட்டில் பப்பியின் முடியை சீவிவிட வேண்டும். அதிக முடி கொண்ட பப்பிகளை முறையாக பராமரிக்காவிடில், உடல் முழுக்க உள்ள முடிகளில் முடிச்சு போல உருவாகி, தோலில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.

 வாக்கிங் முடித்து வீடு திரும்பியதும், பப்பியின் பாதங்களை சுத்தம் செய்வது அவசியம். வெளியிடங்களில் இருக்கும் உண்ணிகள், பப்பியின் கால் வழியாக ஏறி, உடல் முழுக்க வியாபித்து கொள்ளும் அபாயம் இருப்பதால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 பப்பியை குளிப்பாட்டுவது, குரூமிங் செய்வது போன்றவற்றால், அதனுடன் செலவிடும் நேரத்தை, அதிகரிப்படுத்தி கொள்ளலாம். இதனால், பப்பிக்கு உங்கள் மீது அளவில்லாத அன்பு ஊற்றெடுக்கும். அதன் தோலில் ஏதேனும் அலர்ஜி இருந்தாலும், எளிதில் அடையாளம் காண முடியும்.

 பெரும்பாலானோர், பப்பியை வீட்டின் அனைத்து இடங்களிலும் அனுமதிக்கின்றனர். எனவே, வேலை, பிசினஸ் என பிசியாக இருப்பவர்கள் கட்டாயம், பெட் ஸ்பா அழைத்து செல்வது அவசியம். இது, பப்பிக்கு மட்டுமல்ல, உங்களின் ஆரோக்கியத்திற்கும் உத்திரவாதம் தரும்.

நீங்களும் குரூமராகலாம்

மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு போன்ற பெருநகரங்களில், பெட் ஸ்பா பிசினசுக்கு அதிக மவுசு உள்ளது. இந்நகரங்களில், செல்லப்பிராணி வளர்ப்போர், அதன் பராமரிப்புக்கென தனியாக பட்ஜெட் போடுகின்றனர். இக்கலாச்சாரம் தற்போது சென்னை, கோவை போன்ற நகரங்களிலும் பரவலாக காண முடிகிறது. செல்லப்பிராணி வளர்த்த அனுபவம் கொண்டவர்கள், அதன் நலனில் அக்கறை இருப்பவர்கள், முறையாக படித்து, தொழில் கற்று, பெட் ஸ்பா துவங்கலாம். இதற்கு பல்வேறு அமைப்புகள், சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன. வல்லுநர்கள் மூலம், ஒர்க் ஷாப் நடத்தி, செயல்வழியில் சொல்லி தருகின்றன. ஆர்வமும், ஈடுபாடும் இருந்தால், ஆத்மார்த்த திருப்தியோடு, பிடித்த வேலை செய்து, வருமானம் ஈட்டலாம்.

Advertisement