'மூக்கின் வழியாகவே உலகை ஆராயும்'

''நாய்களின் ஆற்றல், வேகம், அதன் வாரிசுகளுக்கு மரபுவழியாக பதிவாகி கொண்டே இருக்கும். இதை முறையாக பயிற்சி அளித்தால் தான், அடுத்தடுத்த சந்ததியும் திறன் மிக்கதாக உருவாகும்,'' என்கிறார் சென்னை, தாம்பரம் அடுத்த முடிச்சூரில் செயல்படும் 'சுகுஸ் டாக் ஆர்டிஸ்டிரி' என்ற டாக் ட்ரைனிங் ஸ்கூல் உரிமையாளர் சுகர்னேஷ்.

பப்பிகளுக்கான பயிற்சி குறித்துஇவர், நம்மிடம் பகிர்ந்தவை:

நாம் கண்கள் வழியாக சுற்றி நடப்பதை அறிவது போல, பப்பி மூக்கின் வழியாக தான் உலகை பார்க்கும். மோப்பத்திறன் அதிகம் கொண்டதால், துப்பறிதலுக்கு நாய்களை பயன்படுத்துகிறோம்.

இதிலும், அதீத மோப்பத்திறன் கொண்ட, ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், பெல்ஜியம் மலினோய்ஸ், டாபர்மேன், டச்ஷண்ட், பீகல் போன்றவைகளை, ராணுவம், காவல் துறையில், ரோந்து பணிகள், வெடிமருந்து, போதைப்பொருள் கண்டறிதல், திருடர்களை அடையாளம் காட்டுதல், காடு, மலை பிரதேசங்களில் மனிதர்கள் தொலைந்தால் தேடுதலுக்கு அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட ப்ரீட்களை மட்டும் இப்பணிகளுக்கு பயன்படுத்த காரணம், இவ்வகை ப்ரீட்கள், பல ஆண்டுகளாக, பயிற்சி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதால், மரபுவழியாக அதன் தனித்திறன்கள், வாரிசுகளுக்கும் பதிவாகி கொண்டே வருகிறது.

மோப்பத்திறன் மட்டுமல்லாமல், பாதுகாவல், வேட்டையாடுதலுக்கும் நாய்களை பயன்படுத்துகிறோம். அதீத ஆற்றல், திறன் இருந்தால் தான், நாய்களால் இப்பணிகளை மேற்கொள்ள முடியும். இதற்கு, பப்பியாக இருக்கும் போதே, சிலவகை பயிற்சி வழங்கி, உரிமையாளருக்கு ஏற்ற வகையில், அதன் செயல்பாடுகளை மாற்ற வேண்டியது தான், பயிற்றுநர்களின் பணி.

பெரும்பாலான பயிற்றுநர்கள், ஒரு வேலை கொடுத்து, பப்பி அதை செய்தால், பிடித்த உணவு கொடுப்பர். உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தால், அதற்கு பிடித்தமானவற்றை தர மறுப்பர். இது, சரியான அணுகுமுறை அல்ல.

பயிற்சி எடுக்கும் ஒரு பப்பி, உத்தரவுக்கு கீழ்படிய மறுத்தால், அதற்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும். குறிப்பாக, பயிற்றுநரின் உத்தரவு, பப்பிக்கு புரியாமல் இருக்கலாம், சோர்வாக உணரலாம், ஆர்வமின்றி இருக்கலாம். இதை புரிந்து கொண்டு, உளவியல் ரீதியாக பப்பியை அணுகுவது அவசியம்.

இதற்கு, சிறந்தபயிற்றுநரை தேர்வு செய்யவேண்டும். அவரின் பயிற்சி முறைகளை நேரில் காணுதல், பயிற்சியின் போது, பப்பியின் ஒத்துழைப்பை கவனிக்க வேண்டும். வகுப்பில், உரிமையாளரும் உடனிருப்பது அவசியம்.ஒரு பப்பி விருப்பத்துடன் பயிற்சியில் ஈடுபடுவதை, அதன் முகத்தில் வெளிப்படும் ஆர்வத்தில் இருந்தே அடையாளம் காணலாம்.

Advertisement