போலாம் ரைட்... பெட்களுக்கு ரயில்வே ரெட் கார்பெட்

நீண்ட துார நெடும் பயணம், பிடித்த பாடல், ஜன்னலோர இருக்கை, கூடவே உங்க செல்லப்பிராணியும் இருந்தால், எவ்வளவு ஜாலியாக இருக்கும். இப்படியான அனுபவத்தை, பட்ஜெட் ப்ரண்ட்லியாக தருகிறது, ரயில்வே நிர்வாகம்.

இதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்த தகவல்கள் இதோ:

 ரயில்வே நிர்வாகம், செல்லப்பிராணிகளை கொண்டு செல்ல இருவிதமான வசதிகளை அறிவித்துள்ளது. முதல் ஏ.சி.,யில் இருவர் மட்டுமே பயணிக்கும்'கூப்பே', நான்கு பேர் வரை பயணிக்கும்'கேபின்'களில், செல்லப்பிராணிகளை உடன் எடுத்து செல்ல அனுமதிக்கிறது.

 ஆனால், கூப்பே, கேபின்களில் உள்ள சீட்டுகளில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பயணிக்க வேண்டும்.

 பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்திருக்க வேண்டும். பயணத்திற்கான முந்தைய நாளில்,'எமர்ஜென்சி கோட்டா'வில், செல்லப்பிராணி உடன் கொண்டு செல்ல, விண்ணப்பிக்க வேண்டும்.

 பயண தேதி, ரயில் எண், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் எண், செல்லப்பிராணி எடுத்து செல்ல அனுமதி கடிதம் மற்றும் பயணிப்போரின் ஆதார் நகல் இணைத்து, ரயில்வே ஸ்டேஷனில் நேரடியாகவோ அல்லது அந்தந்த கோட்டத்திற்கான,'பேக்ஸ்' மூலமாகவோ அனுப்ப வேண்டும். பேக்ஸ் அனுப்ப வேண்டிய எண் குறித்த விபரங்கள், ரயில்வே இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

 எமர்ஜென்சி கோட்டாவை பொறுத்தவரை, விண்ணப்பங்களுக்கு'புரோட்டோகால்' படி முன்னுரிமை வழங்கப்படும். பயணத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு, இதை உறுதி செய்து கொள்ளலாம்.

 கூப்பே, கேபினில் பயணிக்க முடியாத நிலையில், செல்லப்பிராணி தனியாகவும், உரிமையாளர் தனியாகவும் பயணிக்க வசதி உள்ளது.

 ரயிலில் கடைசியாக இருக்கும், 'கார்ட்' பெட்டிக்கு அருகில் செல்லப்பிராணிக்கு, பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். செல்லப்பிராணிக்கு தேவையான உணவு, தண்ணீர் போன்றவற்றை கொடுக்க, இடைப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் நிறுத்தங்களில் இறங்கி, உரிமையாளர் தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

 உரிமையாளர், கூப்பே, கேபின் அல்லது எந்த பெட்டியில் பயணித்தாலும், பயணம் செய்வதற்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்திற்கு முன்பு, ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பார்சல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்.

 செல்லப்பிராணி தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், பயணம் செய்ய தகுதி இருப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவரின் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அங்கு, செல்லப்பிராணிக்கென பிரத்யேக டிக்கெட் வழங்கப்படும்.

 இதைமுன்கூட்டியே திட்டமிட்டால், அலுங்காமல், குலுங்காமல், பயணம் செய்த அலுப்பே தெரியாமல், ஊர் போய்சேரலாம்.

Advertisement