பி.ஏ.பி., உடுமலை கால்வாயில் நீர் திருட்டு

உடுமலை: உடுமலையில், பி.ஏ.பி., கால்வாயில் நீர் திருடியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, நீர் வளத்துறை அதிகாரி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.


பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், பி.ஏ.பி., உடுமலை கால்வாயில், 18வது கி.மீ., ல், மோட்டார் அமைத்து, டேங்கருடன் கூடிய டிராக்டர்கள், லாரிகளில் நீர் திருடப்பட்டு வந்தது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.


இதனையடுத்து, உடுமலை கால்வாய் இளம் பொறியாளர் விஜயசேகர், உடுமலை போலீசில் கொடுத்துள்ள புகார் கொடுத்துள்ளார்.


அதில், 'இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, இரண்டாம் சுற்று தண்ணீர் கால்வாயில் சென்று கொண்டிருக்கும் நிலையில், கால்வாய் கரையில் மோட்டார் அமைத்து, டேங்கருடன் கூடிய டிராக்டர்களில், நீர் திருடப்படுவது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


உடுமலை கால்வாயில் பாசனத்திற்கு திறக்கப்பட்டு நீரை, சட்ட விரோதமாக எடுப்பதால், கடைமடை விவசாயிகளுக்கு உரிய பாசன நீர் கிடைக்காமல், சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.


எனவே, சட்ட விரோதமாக பாசன நீரை கால்வாயில் திருடும் நபர்களை கண்டறிந்து, உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார். உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement