அதிரப்பள்ளி ரோட்டில் யானைகள்: சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

வால்பாறை : கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர். மழைப்பொழிவு குறைந்த நிலையில், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை காண சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில், யானைகள் அடிக்கடி வாகனங்களை வழிமறிக்கின்றன. இதனால், இந்த ரோட்டில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக, மக்களால், 'கபாலி' என பெயரிடப்பட்ட யானை, வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் அடிக்கடி முகாமிட்டு வாகனங்களை விரட்டியது. இந்நிலையில், சில நாட்களாக இந்த ரோட்டில் 'கணபதி' என்று வனத்துறையால் பெயரிடப்பட்ட ஒற்றை யானை அடிக்கடி ரோட்டில் உலா வருவதால், சுற்றுலா பயணியர் அச்சமடைந்துள்ளனர்.

வனத்துறை அதிகாாரிகள் கூறுகையில், 'வால்பாறை, மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில், வனத்தை ஒட்டி ரோடு உள்ளதால், யானைகள் அடிக்கடி ரோட்டை கடந்து செல்கின்றன.

எனவே, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும். மாலை, 6:00 மணிக்கு பின், அதிரப்பள்ளி ரோட்டில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement