இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் உலக கோப்பையில் 'விறுவிறு'

துபாய்: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஐ.சி.சி., சார்பில் பெண்களுக்கான 9வது 'டி-20' உலக கோப்பை தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி முதல் போட்டியில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது. ரன் ரேட்டும் (-2.900) குறைவாக இருப்பதால், எஞ்சிய 3 போட்டிகளில் 'மெகா' வெற்றி பெற வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
அணி தேர்வில் குழப்பம்: நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி சொதப்பியது. இதற்கு அணித் தேர்வில் செய்த குளறுபடி முக்கிய காரணம். மூன்று வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்கினர். இதனால் 'டி-20' அரங்கில் அசத்தும் 'ஸ்பின்னர்' ராதா யாதவை (13 போட்டி, 22 விக்கெட்) சேர்க்க முடியவில்லை. தவிர 'வேகப்புயல்' பூஜா வஸ்தராக்கருக்கு ஒரு ஓவர் மட்டுமே வழங்கினர்.


'பேட்டிங் ஆர்டரை' மாற்றியதால் சிக்கல் ஏற்பட்டது. நான்காவது இடத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் வருவது வழக்கம். இவரை மூன்றாவது இடத்தில் களமிறக்கியதால் சோபிக்கவில்லை. அடுத்து ஜெமிமா (4வது), ரிச்சா கோஷின் (5வது) இடமும் மாற, ரன் சேர்க்க முடியாமல் திணறினர்.

இன்று தலைமை பயிற்சியாளர் அமோல் மஜும்தார் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும். பேட்டிங்கை பலப்படுத்த ஹேமலதாவை சேர்க்கலாம்.


பாத்திமா பலம்: பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் வலுவான இலங்கையை வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. பந்துவீச்சில் கேப்டன் பாத்திமா சனா, நிதா தர், சாதிக் இக்பால் மிரட்டுகின்றனர். 'வேகப்புயல்' டயானா பெய்க், காயத்தால் (கால்) அவதிப்படுவது பலவீனம். பேட்டிங்கிலும் பாத்திமா கைகொடுப்பது பலம்.

யார் ஆதிக்கம்

'டி-20' அரங்கில் இரு அணிகளும் 15 போட்டிகளில் மோதின. இந்தியா 12ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. பாகிஸ்தான் 3ல் வென்றது.
* 'டி-20' உலக கோப்பை வரலாற்றில் 7 முறை மோதின. இந்தியா 5, பாகிஸ்தான் 2ல் வென்றன.

Advertisement