பொறுப்பே இல்ல... எட்டரை மணி நேரம் ஏர் இந்தியா விமானம் தாமதம்; கடுப்பான பிரபல நடிகை

2

புதுடில்லி: ஏர் இந்தியா விமானம் எட்டரை மணிநேரம் தாமதமானதால் பிரபல நடிகை திலோத்தமா ஷோம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.



டில்லியில் இருந்து லண்டனுக்கு செல்வதற்காக இன்று அதிகாலை 5.15 மணி ஏர் இந்தியா விமானத்தில் நடிகை திலோத்தமா ஷோம் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இதற்காக, அவர் அதிகாலையிலேயே விமான நிலையம் சென்ற நிலையில், விமானம் தாமதமாகியுள்ளது.


ஒரு மணிநேரம் அல்ல... 2 மணிநேரம் நேரம் அல்ல.. சுமார் எட்டரை மணிநேரம் விமானம் தாமதமாகியுள்ளது. விமானம் தாமதமான நிலையில், இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் எந்த தகவலையும் பயணிகளுக்கு கொடுக்க வில்லை என்று பிரபல நடிகை திலோத்தமா ஷோம் குற்றம்சாட்டியுள்ளார்.


இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், " இன்று அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் எட்டரை மணிநேரம் தாமதமாக கிளம்பியது. இதற்கான காரணம் குறித்து மெசோஜோ, போன் காலோ வரவில்லை. ஏர் இந்தியா நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டால், சாரி என்று பொறுப்பே இல்லாமல் பதிலளிக்கின்றனர்.


மேலும், ஓய்வெடுக்க அறையும் கொடுக்கவில்லை. மாற்று விமானமும் ஏற்பாடு செய்யவில்லை. ஒரு நோயாளி லண்டனுக்கு சிகிச்சைக்காக செல்வதற்கு, 5.15 மணி விமானத்திற்காக, அதிகாலை 2 மணி முதல் விமான நிலையத்தில் காத்திருந்துள்ளார். எங்கள் லக்கேஜ்ஜூகளை சோதனை செய்துள்ளனர். இது சட்டவிதிக்குள் வருமா? இதற்கு எங்களுக்கு நிவாரணம் என்ன?, இது தொடர்பாக ஏர் இந்தியாவும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் பதிலளிக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதற்கு, ஏர் இந்தியா விமானம் தரப்பில், கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணின் மூலம் பயணிகளுக்கு தகவல் வழங்கப்பட்டு விட்டதாகவும், உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு மன்னிக்கவும் என்று பதிலளித்தனர்.


இதனால், கடுப்பான திலோத்தமா, " எனக்கு மட்டும் அல்ல. பல பயணிகளுக்கு உரிய தகவல்கள் வந்து சேரவில்லை. இது ஒன்றும் உங்கள் வீட்டு விஷேசம் இல்லை. நேரத்தை மாற்றி வைப்பதற்கு, பிரச்னையை திசைதிருப்புவதை விட்டுவிட்டு, பொறுப்போடு செயல்படுங்கள்", எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement