மறக்க முடியாத அக்.,7; பொதுமக்களை குறிவைக்கும் ஹமாஸ்; இஸ்ரேலில் அடுத்தடுத்து தாக்குதல்

காஸா முனை: இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்ற சம்பவம் நடந்து, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி இஸ்ரேலும், ஹமாஸ் அமைப்பினரும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.



கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நுாற்றுக்கணக்கான பேர், இஸ்ரேலில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 71 நாடுகளை சேர்ந்த 1139 பேர் கொல்லப்பட்டனர்.

பிணைக்கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் பலர் இன்னும் மீட்கப்படவில்லை. உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவே இஸ்ரேல், காஸா மீது தாக்குதலை தொடங்கியது. அந்த வகையில் நாளையுடன் ஹமாஸ் - இஸ்ரேல் மோதல் தொடங்கி ஓராண்டு முடிகிறது. இதுவரையில் இந்த போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சூழலில், இஸ்ரேலை பழி தீர்க்க வேண்டும் என்ற நோக்கில், அங்குள்ள மக்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


கடந்த வாரம் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டனர். இன்று பீஎர் சேவாவில் உள்ள பஸ் நிலையத்தில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், 25 வயது பெண் உயிரிழந்தார். 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.


இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் அறிந்த இஸ்ரேல் ராணுவத்தினர், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். போர் தொடங்கி நாளையுடன் ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், இந்த தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது இஸ்ரேலில் அச்சத்தை அதிகரித்துள்ளது.


அதேவேளையில், ஹமாஸ் அமைப்பினரை பழி தீர்க்க இஸ்ரேலும் காஸா மீது விமானத்தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

Advertisement