திருச்சூர் ஏடிஎம் கொள்ளை: ஆற்றில் இருந்து ஆதாரங்கள் சேகரிப்பு

4

திருவனந்தபுரம்: திருச்சூரில் ஏ.டி.எம்.,களில் கொள்ளையில் முக்கிய ஆதாரங்களை கொள்ளையர்கள் ஆற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை போலீசார், ஸ்கூபா குழுவினர் உதவியுடன் சேகரித்து வருகின்றனர்.


கேரள மாநிலம் திருச்சூரில் செப்., 27 ல் இரண்டு இடங்களில், 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சொந்தமான மூன்று ஏ.டி.எம்.,களை, 'காஸ் வெல்டிங்' மூலம் உடைத்து, 66 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து, தமிழகத்திற்கு காரில் கொள்ளையர்கள் தப்பினர். இந்த தகவலை கேரள போலீசார், தமிழக போலீசாருக்கு தெரிவித்து உஷார்படுத்தினர்.


கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்; தடுப்புகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். கொள்ளையர்கள் ஓட்டிச்சென்ற கன்டெய்னர் லாரி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதை கண்டறிந்தனர்.

இதையடுத்து, அந்த லாரியை துரத்திச் சென்ற போலீசார், நாமக்கல் வெப்படை அருகே காட்டுப் பகுதியில் கன்டெய்னர் லாரியை மடக்கினர். அப்போது, கொள்ளையர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்றனர். இதனையடுத்து, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஜமாலுதீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அசார் அலி என்பவர் இரு காலிலும் குண்டு பாய்ந்தது. அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கொள்ளையர்கள் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.


தமிழக போலீசார் கைது செய்த இர்பான், சபீர்கான், சவுகீன் கான், முகமது இக்ரம், மற்றும் முபாரக் ஆகியோரை கேரள போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.


ஆதாரங்களை சேகரிப்பதற்காக கொள்ளையர்களை கேரள போலீசார் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர். கொள்ளை நடந்த 3 ஏ.டி.எம்.,களில் உள்ள பணம் வைக்கும் 12 டிரேக்கள் உள்ளிட்ட முக்கியமான ஆதாரங்களை தாணிக்குடம் ஆற்றில் வீசியதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்தனர்.


இதனையடுத்து போலீசாரின் ஸ்கூபா குழுவினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் ஆற்றில் அதனை தேட துவங்கினர். அதில், பணம் வைக்கும் 9 டிரேக்கள், 2 கேஸ் கட்டர்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை அவர்கள் எடுத்தனர். மேலும் கொள்ளை நடந்த இடங்களில் அறிவியல்பூர்வமான விசாரணயையும் போலீசார் நடத்தினர்.

Advertisement