மால்டோவா மக்களுக்கு லஞ்சம் கொடுக்கிறது ரஷ்யா

1


சிசினோவ்: கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவா, ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில், எதிர்த்து ஓட்டளிப்பதற்காக அந்நாட்டு மக்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தி மனதை மாற்ற ரஷ்யா முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கிழக்கு ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு மால்டோவா. மேற்கே ரோமானியாவையும், கிழக்கே உக்ரைனையும் எல்லையாக கொண்ட ஏழை நாடு.



இந்நாட்டுக்கான அதிபர் தேர்தல் வரும் 20ல் நடக்கிறது. அதோடு, மால்டோவாவை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதற்கான மக்கள் ஓட்டெடுப்பும் நடக்க உள்ளது.


மால்டோவா தனிநாடாக இருந்தாலும், உக்ரைனை போல அந்நாட்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ரஷ்யா விரும்புகிறது.

ஐரோப்பிய யூனியனுடன் இணைந்தால், மேற்கத்திய நாடுகள் அங்கு ஆதிக்கம் செலுத்த துவங்கும். இது ரஷ்யாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மால்டோவா ஐரோப்பிய யூனியனுடன் இணைவது ரஷ்யாவுக்கு பிடிக்கவில்லை.


இதை சீர்குலைப்பதற்கு, ரஷ்யா பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மால்டோவா மக்களின் வங்கி கணக்குகளில், ரஷ்யா பணம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.


கடந்த மாதம் மட்டும், 1,30,000 மால்டோவா மக்களின் வங்கி கணக்குகளில், 125 கோடி ரூபாய் பணத்தை ரஷ்யா செலுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



தற்போதைய அதிபர் மையா சண்டுவை தேர்தலில் தோற்கடிக்கவும் பெரும் தொகை செலவிப்படுவதாக அந்நாட்டின் போலீஸ் தலைவர் வயோரெல் செர்ன் தெரிவித்துள்ளார்.


மால்டோவாவில், தற்போது தடை செய்யப்பட்டுள்ள ரஷ்ய ஆதரவு அரசியல் கட்சியின் தலைவர் இலன் ஷார் என்பவர் வாயிலாக வங்கிகளில் பணம் செலுத்தப்படுவது தெரியவந்துள்ளது.


இதன் வாயிலாக, மால்டோவா அதிகாரிகள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்களை தங்களுக்கு சாதகமாக ஆட்டுவிக்க ரஷ்யா முயற்சித்து வருவதாக போலீஸ் அதிகாரி வயோரெல் தெரிவித்துள்ளார்.

Advertisement