ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

பெங்களூரு: ஜோகர் கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக அமிர் அலி நியமிக்கப்பட்டார்.

மலேசியாவில், 21 வயதுக்குட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஹாக்கி 12வது சீசன் வரும் அக். 19-26ல் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் (அக். 19) ஜப்பானை சந்திக்கிறது. அதன்பின் பிரிட்டன் (அக். 20), மலேசியா (அக். 22), ஆஸ்திரேலியா (அக். 23), நியூசிலாந்து (அக். 25) அணிகளை எதிர்கொள்கிறது. பைனல், அக். 26ல் நடக்கிறது.
இத்தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக அமிர் அலி, துணை கேப்டனாக ரோகித் அறிவிக்கப்பட்டனர். சமீபத்தில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி வென்ற சீனியர் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அமிர் அலி, குர்ஜோத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோல் கீப்பர்களாக பிக்ரம்ஜித் சிங், அலி கான் உள்ளனர்.

சமீபத்தில் ஓய்வு பெற்ற கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், இளம் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி முதன்முறையாக களமிறங்குகிறது.
இந்திய அணி: அமிர் அலி (கேப்டன்), ரோகித் (துணை கேப்டன்), பிக்ரம்ஜித் சிங், அலி கான் (கோல்கீப்பர்), சுக்விந்தர், அன்மோல் எக்கா, தலேம் பிரியோபர்தா, ஷர்தானந்த் திவாரி, அன்கித் பால், மன்மீத் சிங், ரோசன் குஜுர், முகேஷ், சந்தன் யாதவ், குர்ஜோத் சிங், சவுரப் ஆனந்த் குஷ்வாஹா, தில்ராஜ் சிங், அர்ஷ்தீப் சிங், முகமது கொனைன் டாட்.

Advertisement